ராமன், ரஹ்மான் என்ற கருத்துக்கள் எவரது மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்கிறேன்- உலமா கட்சி மற்றும் ஐக்கிய காங்கிரஸ் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி
சில வருடங்களுக்கு முன் நான் உலமா கட்சித்தலைவர் என்ற வகையில் என்னால் கூறப்பட்ட ராமன், ரஹ்மான் என்ற கருத்துக்கள் என் மீது அபிமானமுள்ள சிலருக்கு மனவேதனை தருவதாக உள்ளது என என்னிடம் நேரடியாக சொல்லப்படுவதால் அக்கருத்துக்கள் எவரது மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக நான் பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன் என உலமா கட்சி மற்றும் ஐக்கிய காங்கிரஸ் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் குறித்து ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அதில் தெரிவித்துள்ளதாவது
இஸ்லாமிய மதத்தை பொறுத்த வரை முதல் மனிதன் ஆதம் ஒரு முஸ்லிமாகவே வாழ்ந்தார் என்பதால் உலகில் உள்ள அனைத்து மதங்களை சேர்ந்தோரும் சகோதரர்களே ஆவர்.
இதனால்த்தான் ஆதிகால முஸ்லிம்களின் சிறிய கதைகள் பின்னாளில் பெரும் கற்பனை காவியங்களாக மாறியுள்ளன என்பதே எனது நம்பிக்கை. இந்த வகையில்தான் நான் மேற்படி கருத்துக்களை சொல்லியிருந்தேன்.
ஆனால் அர்ரஹ்மான் என்பது இறைவனின் திருப்பெயர்களில் ஒன்று என்பதால் அதனோடு ஒருவரை இணைப்பது இறைவனை அகௌரவப்படுத்துகிறது என நான் என்றும் மதிக்கும், வாழ்வில், தனது பதவியில் எப்போதும் நேர்மையை கடைப்பிடிக்கும் ஒருவர் எனக்கு வருத்தத்துடன் கூறியதால் என் கருத்து அவரது மனதை மிகவும் காயப்படுத்தியுள்ளது என்பது புரிகிறது.
மக்களை எமாற்றும், இனவாத, லஞ்சம் வாங்கும், மோசமான மனிதர்களின் உள்ளங்களை விட நல்லவர்கள் மனது நோகும் என்றால் அதனை தவிர்ப்பது நல்லது. அந்த வகையில் ரஹ்மானோடு ராமனை இணைத்து கருத்து சொன்னமைக்காக நல்லவர்களின் மனது வலிக்கிறது என்றால் அதற்காக நான் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.