வேண்டுமென்றே சர்க்கரையின் அளவை கூட்டுகிறார் கேஜரிவால்: அமலாக்கத்துறை
திகார் சிறையில் உள்ள கேஜரிவால் வேண்டுமென்றே இனிப்பு வகைகளைச் சாப்பிட்டு தனது சர்க்கரை அளவை அதிகரித்து வருவதாக அமலாக்கத்துறை புகார் தெரிவித்துள்ளது.
கலால் கொள்கை முறைகேடு வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கடந்த 21ம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. அதன்பின்னர் 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் கேஜரிவால் அடைக்கப்பட்ட நிலையில், அவரின் காவல் ஏப்ரல் 23 வரை நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
இந்த நிலையில், கேஜரிவால் ஜாமீன் கோரிய வழக்கு தில்லி நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அதில், இனிப்பு வகைகளை அதிகமாக சாப்பிட்டு வேண்டுமென்றே சர்க்கரையின் அளவை அதிகரிப்பதாக சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா முன்பு அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. அதற்கு, கேஜரிவாலின் உணவு அட்டவணை உள்பட இந்த விவகாரத்தில் ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்ய திகார் சிறை அதிகாரிகளுக்கு சிறப்பு நீதிபதி உத்தரவிட்டார்.
கேஜ்ரிவாலின் சர்க்கரையின் அளவு ஏற்ற இறக்கமாக இருப்பதால் காணொளி வாயிலாக தனது வழக்கமான மருத்துவரை அணுக அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கை நாளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வாய்ப்புள்ள நிலையில், நாளைக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
அரவிந்த் கேஜ்ரிவால் டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அதிக சர்க்கரை கொண்ட உணவை உண்கிறார். தினமும் ஆலு பூரி, மாம்பழம், இனிப்புகளை உட்கொள்கிறார். மருத்துவ ஜாமீன் பெறுவதற்கான காரணங்களை உருவாக்குவதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது என்று அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.