சத்தீஸ்கரில் 4 மாதங்களில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை!
சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2004-14 ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2014-23 வரை இடதுசாரி தீவிரவாதம் தொடர்பான வன்முறைகள் நாட்டில் 52 சதவிகிதம் குறைந்துள்ளது. 69 சதவிகிதம் இறப்பு எண்ணிக்கை 6,035இல் இருந்து 1,868 ஆக குறைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
மாநிலத்தில் முதல்வர் விஷ்ணு தியோ சாய் ஆட்சி உருவானதிலிருந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அதன் விளைவாக 80 நக்சல்கள் கொல்லப்பட்டனர். 125-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தாண்டு ஜனவரி முதல் 150 பேர் சரணடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டின் நக்சல் பாதித்த மாநிலங்களில் பாதுகாப்பு நிலைமையை விரிவாக ஆய்வு செய்ததைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளுமாறு பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிட்டார்.
சத்தீஸ்கரின் காங்கர் மாவட்டத்தில் செவ்வாயன்று பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற மோதலில் 29 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடுமையான துப்பாக்கிச் சண்டையில் மூன்று பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர், மேலும் ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.
கடந்த ஐந்தாண்டுகளில், மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ள 90 மாவட்டங்களில் 5,000க்கும் மேற்பட்ட தபால் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிகம் பாதிக்கப்பட்ட 30 மாவட்டங்களில் 1,298 வங்கிக் கிளைகள் திறக்கப்பட்டு 1,348 ஏடிஎம்கள் செயல்படத் தொடங்கியுள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.