குடிக்க தண்ணீரும் இல்லை.. நல்ல சாலையும் இல்லை: ஒட்டு மொத்தமாக தேர்தலை புறக்கணித்த கிராமம்
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த தொண்டியக்காடு, முனங்காடு மீனவ கிராமத்தில் தேர்தலுக்கு முன்பே தேர்தல் முடிவை பகிரங்கமாக அறிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
அந்த கிராமத்தில் இந்திய சுதந்திரத்திற்கு பிறகு ஒரே ஒருமுறை தான் தார் சாலை போடப்பட்டிருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம். அதுவும் ஒருசில மாதங்களில் பழுதாகி பலமுறை கோரிக்கை மனுக்களை அளித்தும், புகார் மனுக்களை அளித்தும் பலனளிக்காத நிலையில் இரண்டாவது தார் சாலை போட சொல்லியும் மற்றும் சுத்தமான குடிநீர் கேட்டும் போராடும் ஒரு அத்திப்பட்டி மாதிரியான அதிகாரிகளால் கண்டுகொள்ளப்படாத ஒரு குக்கிராமம் தான் அது.
தேர்தலை புறக்கணித்த கிராமம்
கடந்த 2007 ஆம் ஆண்டு கடும் போராட்டத்திற்குப் பிறகு முதல் தார் சாலை அந்த கிராமத்திற்கு பெயரளவில் போடப்பட்டது. சில மாதங்களிலேயே அந்த தார் சாலையும் முற்றிலுமாக சேதம் அடைந்த நிலையில், அப்பொழுதிலிருந்தே சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரியும் முறையான குடிநீர் வேண்டியும் பல போராட்டங்களையும் புகார்களையும் அரசின் பக்கம் வைத்து வந்தனர்.
கடைகோடி கிராமங்களில் ஒன்றான இந்த கிராமத்தை அதிகாரிகள் எவரும் கண்டு கொள்வதில்லை என்பதை இங்கு உள்ள மக்களின் ஆதங்கமாக இருக்கிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு கஜா புயலால் சூறையாடப்பட்ட கிராமங்களில் ஒன்றான இந்த குக்கிராமத்தில் கஜா புயலுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து சாலை புரணமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்கிறார்கள் இப்பகுதி கிராம மக்கள். நான்கு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சமவாரியாக பிரித்துக் கொடுக்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும் இதுவரை 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே அந்த ஊருக்கு பெயரளவில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
அதை பிளாஸ்டிக் குடங்களிலும் கேன்களிலும் சேகரித்து வைத்தே குடித்து வருகின்றனர். கடற்கரை கிராமம் என்பதால் நிலத்தடி நீரை எந்த பயன்பாட்டிற்கும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இது உவர்நீர் பகுதி என்பது அரசின் பதிவேட்டில் கூட இருக்கிறது. இந்த ஊருக்குத்தான் தற்போதைய முதலமைச்சரால் 10 கோடி ரூபாய் நிதியில் ஒரு தரை இறங்கு தளம் துறைமுகம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆம். இது ஒரு மீனவ கிராமம் இங்கு தோராயமாக நாள் ஒன்றுக்கு ஆயிரம் முதல் 5000 மீனவ குடும்பங்கள் இந்த சாலையையும் வளவனாற்றையும் பயன்படுத்தி வருகின்றனர். துறைமுகத்திலிருந்து மீன் முதலான பொருட்களை எடுத்து வர இதுவே முதன்மை சாலை. வேறு சாலைகள் கிடையாது.
இந்த சாலையின் நிலை தான், இப்படி அரசியல் நிலை போல மிகவும் கேவலமாக உள்ளது. குடிக்க நீர் கிடையாது. பயணிக்க சாலை கிடையாது. கோடையில் உப்புக்காற்றும் மணலும் அள்ளித் தூற்றும், ஊரின் அடையாளமான அலையாத்தி மரங்கள் அடியோடு அழிக்கப்பட்டுவிட்டது.
முறையான துறைமுகம் கிடையாது. மக்கள் பிரதிநிதிகளும் தற்பொழுது அரசு அதிகாரிகள் பக்கம் தலை சாய்த்துவிட்டப்படியால் அவர்கள் கேட்டு வாங்கிகொடுக்க வேண்டிய அடிப்படை உரிமைகளை தற்பொழுது மக்கள் கேட்டு போராடவேண்டிய நிலை. அதனால் விரக்தியடைந்த கிராம மக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்கள், போராட்டங்கள் இவை எதுவும் பயனளிக்காத நிலையில் ‘போடு ரோட்ட; அப்புறம் கேளு ஓட்ட’ என்று வேட்பாளர்களை பார்த்து கேள்வி கேட்டு நாளை நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க தீர்மானித்து, தேர்தல் முடிவை முன்பே அச்சிட்டு பதாகைகளில் ஊரின் முன்புறம் வைத்து விட்டனர்.
இதில் எந்த ஒரு தனிநபர் தலையீடும் இல்லாமல் மொத்த கிராமமும் முடிவு செய்து உள்ளது. இத்தனை வருடங்களாக கொடுக்கப்பட்ட மனுக்களையும் போராட்டங்களையும் கண்டுக்கொள்ளாத வட்டாட்சியருக்கு இந்த தகவல் தெரிய வரவே உடனடியாக மாவட்ட காவல் உயர் அதிகாரிகளுடன் பெரிய காவல்துறை படையுடன் நேரடியாக கிராமத்திற்கு வந்து ‘ஓட்டு போடலைனா நடக்குறதே வேற; ஊர சின்னாபின்னமாக்கிடுவேன்’ எனவும் ‘எல்லார் மேலையும் கேஸ் போட்டு உள்ளே தள்ளிடுவோம். லிஸ்ட் ரெடியா தான் வச்சிருக்கிறோம்’ எனவும் பகிரங்கமாக மிரட்டி விட்டு கிராம மக்கள் ரோடு கேட்டு வைத்த பதாகைகளை கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளரை கொண்டு அகற்றி விட்டு சென்றுள்ளனர்.
குடிக்க தண்ணீரும், போய்வர நல்ல சாலையும் கேட்டு போராடும் அந்த குக்குராமத்தை இந்த அடிப்படை வசதிகளை கூட செய்து கொடுக்க முடியாத இந்த அரசு, அவர்களது நியாயமான போராட்டத்தை மட்டும் நசுக்குவது மீனவ கிராம பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்தநாள் வரை ஒரு வேட்பாளரையும் கிராமத்திற்குள் அனுமதிக்கவில்லை இந்த ரோசக்கார மீனவ மக்கள்.
கிராம மக்கள், பக்கத்து ஊர் மீனவர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், பெண்கள் என ஜாதி மத வயது பாகுபாடு இன்றி, நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பது அவர்களின் உரிமைக்கான ஜனநாயக கடமை போராட்டமாக எண்ணுகின்றனர். இப்படியான அடிப்படை உரிமைகளை இழந்து விட்டு அதிகாரிகளின் மிரட்டல்களை சகித்துக் கொண்டு ஒரு மக்கள் பிரதிநிதியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற இந்த அவசியமும் இல்லை என்பதை இப்பகுதி கிராம மக்களின் முடிவாக உள்ளது. ஒருவேளை அரசு தங்களின் மீது பொய்யான வழக்குகளை பதிவு செய்தால் கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சட்டப் போராட்டத்தை நடத்தவும் தயாராக உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
எங்களின் அடிப்படை உரிமையில் ஓரவஞ்சனை காட்டுவது கடைகோடி கிராமம் என்பதாலா அல்லது மீனவ மக்கள் என்பதாலா அல்லது மீனவ கிராமம் தானே எப்படியும் இலங்கை கடற்படைக்கு இரையாவார்கள் என்பதாலா என்று அதிகார வர்க்கத்தின் குருட்டுச் செவுளுக்கு கேட்கும் படி இந்த தேர்தலை புறக்கணித்துள்ளதாக கூறுகின்றனர்.