கொழும்பில் உடைக்கப்பட்ட கடைகள் : பின்னணியில் சிக்கிய மாபியா கும்பல்
கொழும்பில் அங்கீகரிக்கப்படாத கடைகளை நிர்மாணிப்பதன் பின்னணியில் மோசடி கும்பல் ஒன்று இருப்பதாக கொழும்பு மாநகர சபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று இடிக்கப்பட்டுள்ள 21 கடைகளும் மோசடியாளர்களால் கட்டப்பட்ட சட்டவிரோத கட்டுமானங்களே என கொழும்பு மாநகர சபையின் நகர அழகுபடுத்தல் திட்ட இணைப்பாளர் பொறியியலாளர் குமுது போகஹவத்த தெரிவித்துள்ளார்.
மோசடியாளர்கள் கடைகளை நாளாந்த வாடகைக்கு வேறு நபர்களுக்கு குத்தகைக்கு விட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக கட்டடங்கள்
முதன்முறையாக முறைப்பாடு கிடைக்கப்பெறும் போதே மாநகர சபையில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
எனவே இவ்வாறான ஒழுங்கமைக்கப்பட்ட மோசடியாளர்களிடம் சிக்கி பணத்தை வீணடிக்க வேண்டாம் என கொழும்பு மாநகர சபையும் நகர அபிவிருத்தி அதிகார சபையும் மக்களிடம் கேட்டுள்ளன.
புறக்கோட்டையிலுள்ள சட்டவிரோத கடைகளை அகற்றுவதற்கு முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் திகதி கடை உரிமையாளர்களுக்கு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் முதல் அறிவிப்பை வழங்கியது.
கொழும்பு மாநகர சபை
அதனையடுத்து, கடந்த ஜனவரி 2ஆம் திகதி அனைத்து கடை உரிமையாளர்களுக்கும் 14 நாட்களுக்குள் கடைகளை அகற்றுமாறு கொழும்பு மாநகர சபை எழுத்து மூலம் அறிவித்தல் விடுத்துள்ளது.
இந்த கடைகளின் உரிமையாளர்களை அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு பல தடவைகள் வாய்மொழியாக அறிவுறுத்தப்பட்டதாகவும் கொழும்பு மாநகர சபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
எனினும் குறித்த காலக்கெடுவுக்குள் அகற்றாததால் கடந்த 16, 17 ஆகிய இரு தினங்களுக்கு முன் இந்த விதிமீறல் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அபிவிருத்தி நடவடிக்கை
2013ஆம் ஆண்டு இந்த இடத்தில் கட்டப்பட்டிருந்த 73 சட்டவிரோத கடைகள் அகற்றப்பட்டு கொழும்பு பெஸ்டியன் மாவத்தை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை மக்களை கவரும் வகையில் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் மேலதிக பணிப்பாளர் நாயகம் மஹிந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பு மெனிங் சந்தையில் மாத்திரம் 231 அனுமதியற்ற கடைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அந்த கடைகளை அகற்றுவது குறித்து கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் ஆலோசித்து அந்த கடைகளை அகற்றுவது தொடர்பான பரிந்துரைகளை பெறுவதற்கு உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மேலதிக பணிப்பாளர் நாயகம் மஹிந்த விதானாராச்சி மேலும் தெரிவித்தார்.
இந்தக் கடைகளை அகற்றியதற்கும், மிதக்கும் சந்தை வளாகத்தை ஜப்பானிடம் ஒப்படைத்ததற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறினார்.