அமலாக்கத் துறையின் இனிப்புக் குற்றச்சாட்டை மறுக்கும் கேஜரிவால்
திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வேண்டுமென்றே இனிப்புகளை அதிகம் சாப்பிட்டு, ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து பெயில் பெற முயற்சிப்பதாக அமலாக்கத் துறை அளித்த குற்றச்சாட்டை வழக்குரைஞர் மறுத்திருக்கிறார்.
அரவிந்த் கேஜரிவாலுக்கு வீட்டிலிருந்து சமைத்த உணவு வழங்கப்படுவதைத் தடுக்கவே, அமலாக்கத் துறை இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டை முன்வைப்பதாகவும் கேஜரிவாலின் வழக்குரைஞர் விவேக் ஜெயின் விளக்கம் கொடுத்துள்ளார்.
அதோடு, மருத்துவர்கள் பரிந்துரைத்த உணவுகளை மட்டுமே அரவிந்த கேஜரிவால் சாப்பிடுவதாகவும் விவேக் ஜெயின் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அமலாக்கத் துறை, கேஜரிவாலின் உணவு முறை குறித்து கேள்வி எழுப்பியதோடு, மாம்பழம், இனிப்புகள் என அதிக சர்க்கரை கொண்ட உணவுகளை அவர் வேண்டுமென்றே உணவில் சேர்த்துக்கொள்வதாகவும், அதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து உடல்நிலை பாதிக்கப்பட்டால் அதனைக் காரணம் காட்டி பிணை பெற முயற்சிக்கலாம் என்றும் குற்றம்சாட்டியிருந்தது.
தன்னை நீரிழிவு நோயாளி என்று கூறிக்கொள்ளம் அரவிந்த் கேஜரிவால், மாம்பழங்கள், இனிப்புகளையும் சர்க்கரை கலந்த தேநீரையும் சாப்பிடுகிறார். இதையெல்லாம் பார்க்கும்போது அது பெயில் பெருவதற்கான வழியாகவே தோன்றுகிறது என்று குறிப்பிட்டிருந்தது.
வியாழக்கிழமை, கேஜரிவாலின் மனுவை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம், அவரது சர்க்கரை அளவை பரிசோதித்து, மருத்துவரை ஆலோசிக்க அனுமதிக்குமாறு உத்தரவிட்டிருந்தது. இதற்கு அமலாக்கத்துறை இவ்வாறு குற்றம்சாட்டியிருந்தது. இதையடுத்து, கேஜரிவாலின் உணவு குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சிறைத்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்திருந்தது.