ட்ரம்ப் வழக்கு விசாரணை… நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்த நபரால் பரபரப்பு
டொனால்ட் டிரம்பின் குற்றவியல் விசாரணை நடைபெற்று வரும் நீதிமன்ற வளாகத்தில் திடீரென்று ஒருவர் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆபத்தான நிலையில்
திரவத்தை தன் மீது ஊற்றிக் கொண்ட அந்த நபர் அருகில் கூடியிருந்த செய்தி ஊடகங்கள் முன் துண்டு பிரசுரங்களை வீசியுள்ளார். அதன் பின்னரே தம்மீது நெருப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தீக்கொளுத்திக்கொண்ட அந்த நபர் 37 வயதான Maxwell Azzarello என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ட்ரம்ப் விசாரணை நடைபெறுவதால் நீதிமன்ற வளாகத்தில் பெருமளவு பொலிசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையிலேயே அந்த நபர் தீக்குளித்துள்ளார். இதனையடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், தீயை அணைத்துள்ளனர்.
மேலும், அந்த நபர் ஒரு ஸ்ட்ரெச்சரில் அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டார், அவரது உடல் மிகவும் மோசமாக எரிந்துள்ளது என்றே கூறப்படுகிறது. ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தின் பின்னணி
911 இலக்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில், அந்த நபர் கடந்த வாரத்தில் புளோரிடாவில் உள்ள தனது வீட்டில் இருந்து நியூயார்க் வந்தவர் என்றே தெரிய வந்துள்ளது.
நியூயார்க்கில் அவர் மீது எந்த குற்றப் பதிவும் இல்லை, புளோரிடாவில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு அவர் நியூயார்க் நகரத்திற்குச் சென்றது தெரியாது என்றே கூறப்படுகிறது.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்களை பொலிசார் விசாரித்துள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரிக்கப்படும் என்றே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.