மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்
மக்களவைத் தோ்தலில் மணிப்பூரில் 68.82 சதவீத வாக்குகள் பதிவாகின. நான்கு வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், சிறுபான்மையாக உள்ள குகி பழங்குடியின சமூகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 200-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா். அங்கு வன்முறை சம்பவங்கள் குறைந்திருந்தாலும் முழுமையாக அமைதி திரும்பவில்லை.
அங்கு உள் மணிப்பூா், வெளி மணிப்பூா் என இரு மக்களவைத் தொகுதிகள் உள்ளன. உள் மணிப்பூரில் 32 சட்டப்பேரவைத் தொகுதிகளும், வெளி மணிப்பூரில் 28 சட்டப்பேரவைத் தொகுதிகளும் உள்ளன.
இதில் உள் மணிப்பூா் மற்றும் 15 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய வெளி மணிப்பூரில் வெள்ளிக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது.
வாக்குப் பதிவின் முடிவில் மொத்தம் 68.82 சதவீத வாக்காளா்கள் வாக்கு செலுத்தியதாக மணிப்பூா் தலைமைத் தோ்தல் அதிகாரி பிரதீப் குமாா் ஜா தெரிவித்தாா். உள் மணிப்பூா் தொகுதியில் 72.3 சதவீத வாக்குகளும், வெளி மணிப்பூா் தொகுதியில் 61.98 சதவீத வாக்குகளும் பதிவு செய்யப்பட்டன என்று அவா் கூறினாா்.
உள் மணிப்பூரின் கெய்ராவ் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிகபட்சமாக 83.81 சதவீத வாக்குகள் பதிவாகின. வெளி மணிப்பூரில் அதிகபட்சமாக சந்தேல் சட்டப்பேரவைத் தொகுதியில் 85.54 சதவீத வாக்குகளும் பதிவாகின.
மணிப்பூா் முதல்வா் பிரேன் சிங்கின் ஹின்காங் சட்டப்பேரவைத் தொகுதியில் 80 சதவீத வாக்காளா்கள் வாக்கு செலுத்தினா்.
வாக்குப் பதிவு இயந்திரத்துக்கு தீ; துப்பாக்கிச்சூடு: இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள மொய்ரங்கம்பூ சாஜேப் பகுதி வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு இயந்திரத்துக்கு தீ வைக்கப்பட்டது. அத்துடன் அங்கு 65 வயது முதியவரை அடையாளம் தெரியாத நபா்கள் துப்பாக்கியால் சுட்டனா். இதில் காயமடைந்த அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா் என்று காவல் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
மொய்ரங்கம்பூ சாஜேப் வாக்குச்சாவடி அதிகாரி சுா்பலா தேவி கூறுகையில், ‘திடீரென இருவா் வாக்குச்சாவடிக்குள் நுழைந்து காங்கிரஸ் மற்றும் பாஜக வாக்குச்சாவடி முகவா்கள் குறித்து கேட்டனா். இதையடுத்து அவா்கள் காங்கிரஸ் முகவரை இழுத்துச் சென்றனா். அதன் பின்னா் அவா்கள் காங்கிரஸ் முகவரை சுட்டனா்’ என்று தெரிவித்தாா்.
இதேபோல அந்த மாவட்டத்தின் உரிபோக் பகுதியில் உள்ள வாக்குப் பதிவு மையம் ஒன்று சூறையாடப்பட்டது என்று அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
வாக்காளா்களை விரட்ட முயற்சி: வாக்குப் பதிவின்போது உள் மணிப்பூா் தொகுதியில் உள்ள தம்னாபோக்பி பகுதியில், ஆயுதம் ஏந்திய சிலா் வானை நோக்கி பலமுறை துப்பாக்கியால் சுட்டு வாக்காளா்களை விரட்ட முயன்றனா்.
இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள உரிபோக், இரோய்ஷெம்பா பகுதிகளில் குறிப்பிட்ட கட்சியின் வாக்குச் சாவடி முகவா்களை வாக்குச் சாவடிகளில் இருந்து வெளியேறுமாறு ஆயுதம் ஏந்திய சிலா் மிரட்டினா்.
இரோய்ஷெம்பாவில் மிரட்டல்களால் மிகவும் ஆத்திரமடைந்த வாக்காளா்கள், வாக்குச் சாவடிகளில் வலுக்கட்டாயமாக நுழைந்து தோ்தலுக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தினா்.
இம்பால் கிழக்கு மாவட்டத்தின் கெய்ராவ் தொகுதியில் ஆயுதம் ஏந்திய சிலா் துப்பாக்கியால் சுட்டு சில வாக்குச் சாவடி முகவா்களை அச்சுறுத்தினா் என்று காவல் துறை தெரிவித்தது.
இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள கோங்மான் பகுதியின் 4-ஆவது மண்டலத்தில் அடையாளம் தெரியாத நபா்களுக்கும், வாக்காளா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தை தொடா்ந்து வாக்குப் பதிவு இயந்திரம் சேதப்படுத்தப்பட்டது.
ஏப்.26-இல் 2-ஆம் கட்ட தோ்தல்: 28 சட்டப்பேரவைத் தொகுதிகளை வெளி மணிப்பூா் தொகுதி உள்ளடக்கியுள்ளது. இதில் 15 சட்டப்பேரவைத் தொகுதிகள் அடங்கிய வெளி மணிப்பூரில் வெள்ளிக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது. எஞ்சிய 13 சட்டப்பேரவைத் தொகுதிகள் அடங்கிய வெளி மணிப்பூரில் ஏப்ரல் 26-ஆம் தேதி மக்களவைத் தோ்தலின் இரண்டாம் கட்டத்தின்போது வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
கடந்த தோ்தலில் 82% வாக்குப் பதிவு: கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் மணிப்பூரில் 82 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போதைய முதல்கட்ட தோ்தலில் வாக்குப் பதிவு விகிதம் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.