வெறும் காய்ச்சல் தான்… உலக நாடுகளை மொத்தமாக முடக்கலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள்
மர்ம காய்ச்சல் மற்றும் இதுவரை பெயரிடப்படாத நோய் ஒன்றால் உலக நாடுகள் மொத்தமாக முடங்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மிக நெருக்கடியான சூழலை
தொற்று நோய்கள் தொடர்பில் ஆய்வு முன்னெடுக்கும் உலகளாவிய அமைப்பு ஒன்று தெரிவிக்கையில், கோவிட் போன்ற ஒரு மிக நெருக்கடியான சூழலை வெறும் காய்ச்சல் உருவாக்க இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இதுவரை பெயரிடப்படாத நோய் எக்ஸ் கூட பெருந்தொற்றுக்கான அறிகுறிகளுடன் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். 57 நாடுகளை சேர்ந்த உலகளாவிய தொற்று நோய் தொடர்பான நிபுணர்கள் 187 பேர்களின் ஆய்வுகளில் இருந்து அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
ஒவ்வொருவரிடமும் அடுத்த பெருந்தொற்று ஆபத்து குறித்து அவர்களின் தனிப்பட்ட ஆய்வுகளில் இருந்து பட்டியல் கோரப்பட்டுள்ளது. அதில் அவர்கள் மிக ஆபத்தான, உலக சுகாதார அமைப்பில் பட்டியலிடப்படாத தொற்று குறித்து வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.
அதிக வீரியம் கொண்டதாக
அதில் பாதிக்கும் மேலான நிபுணர்கள் குறிப்பிடுகையில் (57 சதவிகிதம்), மர்ம காய்ச்சல் மக்களை பாதிக்கவிருக்கும் அடுத்த மிகப்பெரிய தொற்று என்றும், கோவிட் போன்று உலக நாடுகளை மொத்தமாக முடக்கும் ஆபத்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கு அடுத்த நிலையில் தொற்று எக்ஸ் இருப்பதாகவும் நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர். ஜேர்மனியை சேர்ந்த நிபுணர் ஒருவர் தெரிவிக்கையில், ஒவ்வொரு குளிர் காலத்திலும் உலக மக்கள் காய்ச்சலால் அவதிப்படுவது, ஒருவகை சிறிய பெருந்தொற்று தான் என்றார்.
ஒவ்வொரு ஆண்டும் குளிர் காலத்தில் மக்கள் காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு இதுவரை நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் தடுப்பூசியின் தரத்தை மாற்றிக்கொள்வதுடன், வாழ்க்கையில் பல முறை குளிர் காய்ச்சலுக்கு ஒவ்வொருவரும் பாதிக்கப்படுகின்றனர் என்றார்.
ஆனால், இந்த காய்ச்சல் அதிக வீரியம் கொண்டதாக மாறும் போது மொத்த கட்டுப்பாடும் மீறிவிடும் வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.