;
Athirady Tamil News

அமெரிக்காவின் தலையீடு : தணியுமா ஈரான் மற்றும் இஸ்ரேல் போர்…!

0

அமெரிக்க அரசு இஸ்ரேல் நாட்டிற்கு 13 பில்லியன் மதிப்பிலான இராணுவ உதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளமையினால் இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் பதற்றம் தணிவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்தோடு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(Benjamin Netanyahu) இதனை வரவேற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே சில வாரங்களாகவே மோதல் போக்கு ஏற்பட்டு வருகின்ற நிலையில் மத்திய கிழக்கு பகுதியில் போருக்கான பதற்ற நிலை நீடித்து வருகிறது.

அணு ஆயுதங்கள்
ஈரான் சில மாதங்களில் அணு ஆயுதங்களை கட்டமைக்க உள்ளதாக இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன.

ஆனால் இதனை ஈரான் மறுத்துள்ளதோடு ஈரான் தற்போது மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளானது அமைதிக்காகவும் மற்றும் குடிமக்களின் நன்மைக்காகவும் என்று தெரிவித்துள்ளது.

இந்த சூழலில் ஈராக் நாட்டின் மத்திய பகுதியில் அமைந்த இராணுவ தளத்தின் மீது இரவோடு இரவாக இஸ்ரேல் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது.

இராணுவ வீரர்கள்
குறித்த தளத்தில் இராணுவ வீரர்கள் மற்றும் ஈரான் ஆதரவு பெற்ற துணை இராணுவ படையினர் ஆகியோர் தங்கியுள்ள நிலையில் ஏற்கனவே இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் மூள்வதற்கான சூழல் காணப்படும் சூழலில் இது மூன்றாவது உலக போருக்கு வழிவகுக்குமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இஸ்ரேலின் அயர்ன் டோம்(Iron Dome) வான் பாதுகாப்பு அமைப்பு உள்பட இஸ்ரேல் இராணுவத்தின் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அமெரிக்க அரசு இஸ்ரேல் நாட்டிற்கு 13 பில்லியன் மதிப்பிலான இராணுவ உதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் இந்த நடவடிக்கையினால் தற்போது இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றம் தணிவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.