மன அழுத்தத்தை குறைக்கும் வாழைப்பழம்…!
அனைத்து நாடுகளிலும் மிக மலிவான விலையில் கிடைக்கக்கூடிய மற்றும் எந்நாளும் அனைவர் வீட்டிலும் இருக்கும் ஒரே பழமான வாழைப்பழத்தில் யாரும் அறிந்திராத பல நன்மைகள் உள்ளன.
இதனால், ஏழைகளின் ஆப்பிள் என அழைக்கப்படும் வாழைப்பழத்தை தினமும் உட்கொள்ளுமாறு வைத்தியர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
அத்துடன், உடல் எடையை அதிகரிக்க முயற்சி செய்பவர்கள், உடல் பலவீனத்துடன் போராடுபவர்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க விரும்புபவர்கள், திடீரென்று ஏற்படும் பசியை தணிக்க விரும்புபவர்கள், பயணங்களின் போது மிகவும் எளிமையான மற்றும் சத்தான பழத்தை எடுத்து கொள்ள விருப்புபவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற பழமாக வாழைப்பழம் திகழ்கிறது.
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் எண்ணற்ற வகைகள் உள்ளன. செவ்வாழை, ரஸ்தாளி, கற்பூரவள்ளி, பூவன் பழம், பச்சைப்பழம், மலைப்பழம், பேயன் பழம், மொந்தம் பழம், மட்டி பழம், ஏலக்கி போன்ற வகைகளில் வாழைப்பழங்கள் உள்ளன.
வாழைப்பழத்தில் விட்டமின் ஏ, பி6, சி, மக்னீசியம், நார்ச்சத்துக்கள் ஆகியவை நிறைந்துள்ளன.
தொடர்ந்து பழுத்த வாழைப்பழம் சாப்பிட்டு வருவது ஆர்த்தரைடீஸ், மன அழுத்தம் மற்றும் இதய நோய்கள் வரும் வாய்ப்புகளைக் குறைக்கிறது.
தினமும் ஒரு வாழைப்பழம்
ஒரு பழுத்த வாழைப்பழத்தில் மனித உடலுக்கு சக்திவாய்ந்த எலும்புகளையும் தசைகளையும் உற்பத்தி செய்ய ஒரு நாளைக்குத் தேவைப்படும் பொட்டாசியத்தின் அளவில் 11 வீதம் உள்ளது.
தினமும் ஒரு பழுத்த வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம், சிறுநீரகக் கற்கள், முழங்கால் வலி மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கும். அத்துடன், பழுத்த வாழைப்பழத்தில் உள்ள அதிக நார்ச்சத்து ஆரோக்கியமான செரிமான மண்டலத்தையும் மேம்படுத்துகிறது.
இதனை தவிர பழுத்த வாழைப்பழத்தை நாளாந்தம் உட்கொண்டால், உடலில் புற்று நோய் செல்கள் உருவாவது தடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழுத்த வாழைப்பழம் கொண்டுள்ள சரியான அளவு ஆன்டி ஆக்சிடென்டுகள் சர்க்கரை நோய், இதய நோய்கள் மற்றும் வலிப்பு போன்ற நரம்பு அழற்சி குறைபாடுகளையும் கூடத் தடுக்கும்.