;
Athirady Tamil News

எங்கள் வளங்களை முறையாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் – வட மாகாண பிரதம செயலாளர்

0

எங்கள் வளங்களை நாங்கள் முறையாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இதற்கான துறைசார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு அதற்கேற்ப எங்கள் திட்டங்களை வகுக்க வேண்டும் என வடக்கு மாகாண பிரதம செயலாளர் எல்.இளங்கோவன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் பிரதேச செயலக பிரிவின் கீழ் உள்ள பள்ளங்கோட்டை கிராம அலுவலர் பிரிவின் கீழ் உள்ள புதுக்காடு கிராமத்திற்கு யாழ்ப்பாணம் இந்து ஆன்மீக அறக்கட்டளை நிதியம் மற்றும் மன்னார் சர்வமத ஆன்மீக அறக்கட்டளை இணைந்து ஏழு இலட்சம் ரூபா பெறுமதியில் சுத்திகரிக்கப்பட்ட குடி நீர் விநியோக திட்டம் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்றது இதில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் புதிய சூழலை எடுத்தவாக்கில் உள்வாங்கியதனால் பல்வேறு வகையான துன்பங்கள் மற்றும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றோம். தண்ணீரைக் கூட போத்தலில் பருகவேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளோம்.

எங்கள் மூதாதையரின் வாழ்வியல் உணவு முறைகளைக் கைவிட்டு புதிய முறைக்கு மாறியதனால் பல்வகையான நோய்களை உள்ளாகியுள்ளோம். இன்றைய நிலையில் கூட குடிநீரைச் சுத்திகரிப்பதற்கான இயந்திரத்தைப் பயன்படுத்தியே பாதுகாப்பான குடிநீரைப் பருகும் நிலை உருவாகியுள்ளது.

இவ்வாறான சூழலில் எங்கள் வளங்களை நாங்கள் முறையாகப் பயன்படுத்துவதற்கு முறையான ஆய்வுகளை மேற்கொண்டு வளங்களை இனம் கண்டு இவற்றைப் பயன்படுத்த வேண்டும் இன்றைய இந்த நிகழ்விற்கு யாழ்ப்பாணம் இந்து ஆன்மீக அறக்கட்டளை நிதியமும் மன்னார் சர்வமத ஆன்மீக அறக்கட்டளையும் இணைந்து இந்த உதவியை செய்துள்ளார் இவர்கள் புலம்பெயர்ந்து இருந்தாலும் கிராமங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காக இரவு பகல் பாராது நிதியினை சேகரித்து இந்தத் திட்டத்தை ஆரம்பித்துள்ளார்கள்.

இவர்களுக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன் மக்களாகிய நீங்கள் ஆரோக்கியமான போசாக்குள்ள உணவுகளை உட்கொள்வதில் கவனத்தில் எடுக்கவேண்டும் என்றார்.

இந்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கனகேஸ்வரன் நானாட்டான் பிரதேச செயலாளர் திருமதி சிவசம்பு, அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஜி. விக்ரர் சமூர்த்தி உத்தியோகத்தர் அன்பழகன் அப்பகுதி கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

இந்தத் திட்டத்தின் கீழ் இரு கிராம அலுவலர் பிரிவினைச் சேர்ந்த சுமார் 600 குடும்பங்கள் பயன்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.