ஜனாதிபதியின் பொருளாதாரக் கொள்கையினால் ஏற்பட்டுள்ள சாதக நிலை : அரச ஊழியர்களுக்கும் நன்மை
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான நிவாரணத் தொகை மற்றும் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு உள்ளிட்டவை ஜனாதிபதியின் பொருளாதாரக் கொள்கையின் காரணமாகவே நடந்துள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஷ்(Vadivel Suresh) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தலைமையில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாட்டின் பொருளாதார நிலை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இந்த நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்ட ஜனாதிபதியின் பணி பாராட்டத்தக்கது. வரிசை யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்து மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய நாட்டை உருவாக்க ஜனாதிபதியால் முடிந்தது.
அவருக்கு இருக்கும் வெளிநாட்டு தொடர்புகளின் காரணமாக, நாட்டின் பொருளாதாரத்தை நிலையான நிலைக்கு கொண்டு வரவும், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சலுகைகளை வழங்கவும் முடிந்தது.
மேலும், 24 இலட்சம் பேருக்கு அஸ்வெசும பலன்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உறுமய திட்டத்தின் கீழ் காணி உறுதிகள் வழங்கப்படுகின்றன. அத்துடன் அரச சேவையின் சம்பளம் பத்தாயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஜனாதிபதியின் பொருளாதாரக் கொள்கையின் காரணமாகவே நடந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.