வரி ஏய்ப்புச் செய்த வாகனங்கள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
வரி ஏய்ப்புச் செய்து மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களை வேறு யாருக்கும் விற்பனை செய்யவோ, கைமாற்றவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று(22.04.2024) குறித்த தடையை விதித்துள்ளது.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணையொன்றின் பிரகாரம் இலங்கையில் 112 வாகனங்கள் வரி ஏய்ப்புச் செய்து மோசடியான முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணைகள்
இந்நிலையில் அந்த வாகனங்கள் உரிய முறையில் சுங்கத்திணைக்களத்தில் இருந்து விடுவிக்கப்படாமல் போலியான ஆவணங்கள் மூலம் விடுவிக்கப்பட்டு, பெறுமதி குறைந்த வாகனங்களின் பதிவெண்களைக் கொண்டு மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் மோசடியான முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக விசாரணை முடிவில் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர்.
அதன் பிரகாரம் குறித்த வாகனங்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள் நிறைவடையும் வரை அவற்றை வேறு நபர்களுக்குக் கைமாற்றவோ, விற்பனை செய்யவோ தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.