மாலைதீவு நாடாளுமன்றத் தேர்தலில் சீனாவுக்கு ஆதரவான கட்சிக்கு அமோக வெற்றி…!
மாலைதீவில் இடம்பெற்ற நாடாளுமன்றத்தின் 93 இடங்களுக்கான தோ்தலில் அதிபா் முகமது முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி இறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நேற்று முன் தினம் (21) இடம்பெற்ற மாலைதீவு நாடாளுமன்றத் தோ்தலில் உள்ளூர் நேரப்படி மாலை 5 மணி வரையில் 72.96 சதவீத வாக்குகள் பதிவானதாக அந்நாட்டு தோ்தல் ஆணையம் தெரிவித்தது.
நாட்டில் உள்ள 34 விடுதிகள், சிறைகள், பிற தீவுகளில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்து, அதேபோல் இந்தியாவின் திருவனந்தபுரம், இலங்கையின் கொழும்பு, மலேசியாவின் கோலாலம்பூா் போன்ற வெளிநாடுகளில் உள்ள நகரங்களிலும் என மொத்தம் 602 வாக்குப் பெட்டிகள் அமைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இறுதிப் பெரும்பான்மை
மேலும், இந்தத் தோ்தலில் அதிபா் முகமது முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் (பிஎன்சி), மற்றும் எதிர்க்கட்சியான மாலைதீவு ஜனநாயகக் கட்சி (எம்டிபி) உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்த 368 வேட்பாளா்கள் போட்டியிட்டுள்ளனர்.
இந்நிலையில் மாலைதீவின் தாஜுதீன் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் அதிபா் முய்சு தனது வாக்கைப் பதிவு செய்தார், அதேபோல் முன்னாள் அதிபா் இப்ராஹிம் முகமது சோலி, மாலியில் உள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தாா்.
பின்னர் தேர்தல்கள் முடிவுற்றது, மாலை வேளையில் வாக்கு எண்ணிக்கை ஆரம்பமாகி முடிவுகள் வெளிவரத் தொடங்கின. அதன்படி, அதிபா் முய்சுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி 67 இடங்களில் வெற்றி பெற்று இறுதிப் பெரும்பான்மையைப் பெற்றது.
பதவிநீக்கம் செய்யுமாறு
அதற்கு அடுத்தபடியாக மாலைதீவு ஜனநாயகக் கட்சி 12 இடங்களில் வென்றுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாலைதீவு அதிபா் முகமது முய்சு சீன ஆதரவு நிலைப்பாட்டை கொண்டுள்ளாா், நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் பெரும்பான்மை வகிக்கும் நிலையில், முய்சுவின் அமைச்சரவையில் 3 நியமன அமைச்சா்களை நியமிப்பது அண்மையில் தடைப்பட்டிருந்தது.
அதுமாத்திரமன்றி முய்சுவிற்க்கு எதிரான ஊழல் ஆய்வு அறிக்கை அண்மையில் வெளியாகிய நிலையில், இது தொடா்பாக விசாரணை நடத்துமாறும், அதிபரை பதவிநீக்கம் செய்யுமாறும் எதிா்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டை அதிபா் முய்சு மறுத்துள்ளாா்.
இந்தச் சூழலில் நடைபெற்றுள்ள நாடாளுமன்றத் தோ்தல் அதிபா் முய்சுவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்த நிலையில், இறுதிப் பெரும்பான்மை வாக்குகளை அவரது மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.