லட்சக்கணக்கில் ஏலம் போன கூரை கத்தாழை மீன்! தஞ்சாவூர்க்காரருக்கு அடித்தது அதிர்ஷ்டம்
தஞ்சாவூரில் 25 கிலோ எடை கொண்ட கூரை கத்தாழை என்ற மீன் ஒன்று மட்டுமே லட்சக்கணக்கில் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
ரூ 1.87 லட்சத்திற்கு ஏலம்
தமிழக மாவட்டமான தஞ்சாவூர், அதிராம்பட்டினம் நகராட்சியில் உள்ள மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திற்கு மீனவர்கள் தினமும் மீன் விற்பனை செய்து வருகிறார்கள்.
இங்கிருந்து மீன்களை வியாபாரிகள் வாங்கி ஏலத்திற்கு விடுவார்கள். இந்நிலையில், அதிராம்பட்டினம் பகுதி கரையூர் தெரிவை சேர்ந்த மீனவர் ரவிக்கு கூரை கத்தாழை மீன் சிக்கியது.
25 கிலோ எடையுள்ள இந்த மீன் ரூ 1.87 லட்சத்திற்கு ஏலம் போனது. ஷியானிடே என்ற மீன் வகையை சேர்ந்த இந்த மீனில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
இந்த வகையான ஆண் மீன்களுக்கு செவில் சுவாசத்தோடு, அடி வயிற்றில் இருக்கும் நெட்டி என்ற காற்றுப்பை உதவியுடன் கூடுதல் சுவாசத்துடன் இருக்கும். அதேபோல பெண் மீன்களுக்கு சிறிய அளவிலான நெட்டி இருக்கும்.
இந்த நெட்டி என்பது ஆபத்து காலத்தில் ஒலியை எழுப்பும். இது, ஐசிங்கிளாஸ் என்னும் வேதிப்பொருட்களை கொண்டிருப்பதால் ஒயின், ஜெல்லி மிட்டாய், மருந்துகள் தயாரிக்கும் மூலப்பொருட்களாக பயன்படுகிறது.
ஒரு மீனில் 100 கிராம் எடை வரை நெட்டி இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனை பிடிப்பதற்கு மீனவர்கள் கடலில் 4 முதல் 6 நாட்கள் வரை தங்கியிருக்க வேண்டுமாம். குறிப்பாக இந்த மீன்கள் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.