நாய்ச் சண்டை போல் அதிகாரத்தைக் கைப்பற்ற சதி! சஜித் பகிரங்கம்
பூரண முடியாட்சியை எனக்குத் தருவதாகச் சொன்னாலும், திருடர்களுடன் ஒருபோதும் டீல் போட மாட்டேன். 220 இலட்சம் மக்களுடனே எனக்கு ‘டீல்’ இருக்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழில்நுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 161 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், அம்பாந்தோட்டை, முல்கிரிகல, வீரகெட்டிய மீகஸ்ஆர மகா வித்தியாலயத்துக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (22) திங்கட்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அரசியலில் நாய்ச் சண்டை
அவர் மேலும் தெரிவிக்கையில்,”தற்போது நாட்டு அரசியலில் நாய்ச் சண்டை போல் அதிகாரத்தைக் கைப்பற்ற சதிகள் நடந்து வருகின்றன.
இந்தச் சதிகளை மேற்கொள்ளும் பேராசை நாட்டின் கல்வியை கட்டியெழுப்ப வேண்டும் என்ற விடயத்தில் அற்பேனும் இல்லை.
இவையனைத்தும் அதிகாரம் மற்றும் பதவிகளைப் பெற்றுக்கொள்ளும் ஆசையால் மேற்கொள்ளப்படுகின்றன.
திருடர்களுடன் சேர்ந்து ஜனாதிபதி பதவியில் நானும் அமர்ந்திருந்தால் திருடர்களைப் பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். நான் அவ்வாறு திருடர்களின் தயவில் பதவிகளை ஏற்காததால், திருடர்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை இல்லை.
டீல் அரசியல் இல்லை
தங்கள் நெருங்கிய நண்பர்களை பாதுகாத்து வருவதே இன்றும் கூட உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் உண்மைகள் வெளிவராமைக்கான காரணமாகும். இது குறித்து பேராயர் கூட கருத்து வெளியிட்டுள்ளார்.
இவ்வாறான வன்முறைச் செயலையும், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களையும் தூசிக்கும் மதிப்பில்லாமல், மறந்து செயற்பட்டு வருகின்றனர்.
தற்போதைய ஆட்சியாளர் திருடர்களுடனும் நெருங்கிய நண்பர்களுடனும், சக கூட்டாளி அரசியல்வாதிகளுடன் நட்புறவு வைத்திருந்தாலும், நாட்டின் 220 இலட்சம் மக்களுடனே நான் நட்புறவு வைத்திருக்கின்றேன்.”என்றார்.