தபால் வாக்குக்கு மறுப்பு.. நேரடியாக வந்துதான் ஓட்டு போடுவேன் – 112 மூதாட்டிக்கு பாராட்டு!
112 மூதாட்டி ஒருவர் தபால் வாக்கு செலுத்த விரும்பவில்லை என்றும், நேரடியாக வந்து வாக்களிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
தபால் வாக்கு
மக்களவை தேர்தல் 2024 கடந்த 19-ம் தேதி தொடங்கி வரும் ஜூன் மாதம் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் வீட்டில் இருந்தபடியே தபால் வாக்கு செலுத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிலையில் மூதாட்டி ஒருவர் தபால் வாக்கு செலுத்த விரும்பவில்லை என்றும், நேரடியாக வந்து வாக்களிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். மும்பையில் மே 20-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையொட்டி 85 வயதுக்கு மேற்பட்டவர்களின் வீடுகளுக்கே சென்று தபால் வாக்கு செலுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
மூதாட்டிக்கு பாராட்டு
இந்நிலையில் கடந்த 1912-ம் ஆண்டு பிறந்தவர் காஞ்சன்பென் பாட்ஷா (112) என்ற மூதாட்டி. இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். கணவர் இளம் வயதிலேயே இறந்து விட்டார். தற்போது அவர் தெற்கு மும்பையின் பிரீச் கேண்டி பகுதியில் தனது 2 பேரன்களுடன் வசித்து வருகிறார்.
அந்த மூதாட்டி வீட்டில் இருந்தே வாக்களிக்க மறுத்து விட்டார். வயதாகிவிட்டாலும் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார். அந்த மூதாட்டியின் இந்த அர்ப்பணிப்பால் ஈர்க்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின் நோடல் அதிகாரி மற்றும் அவரது குழுவினர் காஞ்சன்பென்னைப் பாராட்டி கவுரவித்துள்ளனர்.