தியத்தலாவ பந்தயப் பாதையில் விபத்து ; விசாரணைக்கு ஏழு பேர் இராணுவ குழு நியமணம்
பதுளை தியத்தலாவை – நரியகந்த பந்தயப் பாதையில் Fox Hill Super Cross 2024 ஓட்டப் பந்தயத்தின் போது இடம்பெற்ற விபத்து தொடர்பில் ஆராய்வதற்காக ஏழு பேர் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கு இலங்கை இராணுவம் தீர்மானித்துள்ளது.
மேஜர் ஜெனரல் ஒருவரின் தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்படும் என மேஜர் ஜெனரல் ரசிக குமார தெரிவித்துள்ளார்.
விபத்தின் தற்போதைய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்தி இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதோடு தியத்தலாவை நரியகந்த பந்தயப் பாதையில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு வாகன சாரதிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இருவரையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பண்டாரவளை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் இருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நேற்று காலை தியத்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மாத்தறை மற்றும் பேரதான பிரதேசங்களைச் சேர்ந்த 36 மற்றும் 47 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை இராணுவத்தினர் மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தியத்தலா நாராயணகந்த பந்தயப் பாதையில் இடம்பெற்ற Fox Hill Super Cross 2024 பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் வெளிமடை பகுதியைச் சேர்ந்த சிவகுமார் தனுசிகா என்ற 8 வயது சிறுமியும் உள்ளடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.
மேலும், விபத்தில் சிக்கிய 19 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.