அங்கொட லொக்காவின் கோடிக்கணக்கான சொத்துக்கள் ஹரக் கட்டாவின் பெயரில்: விசாரணைகள் தீவிரம்
அங்கொட லொக்காவின் கோடிக்கணக்கான சொத்துக்கள் மற்றும் துப்பாக்கிகள் பாதாள உலக தலைவர் ஹரக் கட்டாவின் கைகளுக்குச் சென்றுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் வெளிப்படுத்தியுள்ளனர்.
அங்கொட லொக்காவின் மரணத்தின் பின்னர் 25 புதிய துப்பாக்கிகள் மற்றும் கோடிக்கணக்கான சொத்துக்கள் ஹரக் கட்டாவின் பெயரில் மாற்றப்பட்டுள்ளது.
பாகிஸ்தானிய போதைப்பொருள் வலையமைப்பிடம் இருந்து பெறப்பட்ட ஹெரோயினுடன் , கைத்துப்பாக்கிகளும் அங்கொட லொக்காவின் தரப்புக்கு அனுப்பப்பட்டுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடத்திச்செல்லப்பட்ட ஆயுதங்கள்
இந்தியாவில் அங்கொட லொக்கா உயிருடன் இருப்பதாக நம்ப வைத்து அவரது நெருங்கிய உதவியாளர்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு குறித்த கும்பலின் ஆயுதங்கள், போதைப்பொருள், பணம் என்பன அபகரிக்கப்பட்டுள்ளமை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் அங்கொட லொக்காவின் கும்பலிடம் இருந்து கடத்திச்செல்லப்பட்ட ஆயுதங்களை கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
இலங்கையின் பிரபல பாதாளக்குழுவின் தலைவரான, அங்கொட லொக்கா இந்தியாவில் பிரதீப் என்ற போலி பெயருடன் தலைமறைவாகியிருந்த நிலையில், மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.