போதைப்பொருளுடன் கைதான அரச ஊடகவியலாளரின் மகன் தொடர்பில் விசாரணை முன்னெடுப்பு -மருதமுனையில் சம்பவம்
பெரிய நீலாவணை விசேட அதிரடிப்படையினரால் தகவல் ஒன்றின் அடிப்படையில் போதைப் பொருட்களுடன் கைதான சந்தேக நபரான அரச ஊடகவியலாளரின் மகனை 7 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டிருந்தது.
அப்துல் கையூம் பிசால் அகமட் (வயது-24) என்ற சந்தேக நபர் நீண்ட காலமாக போதைப்பொருட்களை விநியோகம் செய்து வந்ததுடன் அவற்றை உபயோகித்தும் வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த காலங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் குறித்த சந்தேக நபர் கைதாகி உள்ளதுடன் போதைப்பொருள் பாவனைக்காக புனர்வாழ்வு முகாம்களில் சிகிச்சை பெற்றிருந்தார்.அத்துடன் சந்தேக நபர் இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பிறை எப்.எம். இன் கட்டுப்பாட்டாளராக உள்ள சிரேஸ்ட ஊடகவியலாளர் பஷீர் அப்துல் கையூம் என்பவரின் மகன் ஆவார்.
குறித்த சந்தேக நபர் வசம் இருந்து 1 கிராம் 90 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பெரிய நீலாவணை விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளதுடன் கடந்த வெள்ளிக்கிழமை 17 ஆந் திகதி கைது செய்யப்பட்டு பெரிய நீலாவணை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.
அதன் பின்னர் 7 நாட்கள் ஏப்ரல் மாதம் 24 ஆந் திகதி வரை கல்முனை நீதிமன்ற நீதிவானின் உத்தரவிற்கமைய தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பெரிய நீலாவணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை சந்தேக நபரிடம் மேற்கொண்டு வருகின்றனர்.