உயிருக்கு ஆபத்தாகும் Smoke Biscuits.., குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம் என தமிழக அரசு எச்சரிக்கை
குழந்தைகள் ஸ்மோக் பிஸ்கட் உட்கொள்ள வேண்டாம் எனவும், உயிருக்கு ஆபத்து எனவும் தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் ஸ்மோக் பிஸ்கட் உட்கொண்ட சிறுவன் ஒருவன் வலியால் துடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
இந்நிலையில் திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கும் ஸ்மோக் பிஸ்கட்டை குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம், உயிருக்கு ஆபத்து என்று தமிழக உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும் உணவு பொருட்களை சாப்பிடுவதன் மூலம் உயிருக்கே ஆபத்தாக அமையலாம்.
உயிருள்ள திசுக்களுடன் திரவ நைட்ரஜன் தொடர்பு கொள்ளும்போது கடுமையான உறை பனியை உருவாக்கும் அளவுக்கு குளிர்ச்சியாக இருக்கும். இதனால் திசுக்கள் உறைந்து இரைப்பைக் குழாயை சிதைக்கும்.
10 ஆண்டுகள் சிறை
நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை உணவு விடுதிகளில் விற்பனை செய்ய கூடாது. டிரை ஐஸை உணவுக்கு பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்றும், ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் தமிழக உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், டிரை ஐஸை குழந்தைகள் உட்கொள்வதால் கண் பார்வை மற்றும் பேச்சு பறிபோகும் ஆபத்து இருப்பதால் உயிரிழப்புகள் நேரலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதோடு சென்னையில் திரவ நைட்ரஜன் உணவுப்பொருள் விற்கப்படுகிறதா என்று ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.