காசாவில் நூற்றுக்கணக்கான உடல்களைக் கொண்ட புதைகுழிகள்: அச்சத்தில் ஐ.நா
காசாவில் உள்ள நாசர் மற்றும் அல் ஷிஃபா மருத்துவ வசதிகள் அழிக்கப்பட்டமை மற்றும் அங்கு நூற்றுக்கணக்கான உடல்கள் அடங்கிய வெகுஜன புதைகுழிகள் பற்றிய அறிக்கைகளால் தான் திகிலடைந்ததாக ஐ.நா மனித உரிமை பேரவையின் தலைவர் வோல்கர் டர்க் (Volker Türk) நேற்று (23) தெரிவித்துள்ளார்.
இந்த வாரம் கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனை இஸ்ரேலிய துருப்புக்களால் கைவிடப்பட்டன. இதன் பின்னர் பலஸ்தீன அதிகாரிகள் புதைகுழிகளில் பல உடல்களைக் கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.
“பல உடல்கள் தெளிவாகக் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் எச்சரிக்கையை எழுப்ப வேண்டிய அவசியத்தை நாங்கள் உணர்கிறோம்” என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையரின் பேச்சாளர் ரவினா ஷம்தாசனி கூறியுள்ளார்.
புதைக்கப்பட்ட உடல்கள்
மீட்கப்பட்ட உடல்களில் சிலவற்றின் கைகள் கட்டப்பட்டிருந்தன, இது சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களின் கடுமையான மீறல்களைக் குறிக்கிறது. மேலும் இவை மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
நாசரில் 283 உடல்களும் அல் ஷிஃபாவில் 30 உடல்களும் கண்டெடுக்கப்பட்டதாக கூறும் பலஸ்தீனிய அதிகாரிகளின் அறிக்கைகளை உறுதிப்படுத்தும் பணியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் செயற்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.
அந்த அறிக்கைகளின்படி, சில உடல்கள் கழிவுக் குவியல்களுக்கு அடியில் புதைக்கப்பட்டன, மேலும் பெண்களும் முதியவர்களும் அதில் அடங்குவர்.
காசாவின் ஹமாஸ் நடத்தும் சிவில் அவசர சேவை, நேற்று நாசரில் உள்ள ஒரு வெகுஜன புதைகுழியில் மொத்தம் 310 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றும் மேலும் இரண்டு புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன, ஆனால் இன்னும் தோண்டப்படவில்லை என்றும் கூறியது.
ரஃபா மீதான ஊடுருவல்
எனினும் ஹமாஸ் போராளிகள் மருத்துவமனைகளை தளமாக பயன்படுத்துகின்றனர் என்றும், அல் ஷிஃபாவில் சுமார் 200 போராளிகளை தமது படைகள் கொன்று பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்காமல் தவிர்த்ததாக இஸ்ரேல் கூறுகிறது.
சுமார் 1.2 மில்லியன் பொதுமக்கள் ஒன்று கூடியுள்ள ரஃபா மீதான முழு அளவிலான ஊடுருவலுக்கு எதிரான எச்சரிக்கையையும் அவர் மீண்டும் மீண்டும் கூறினார், இது “மேலும் அட்டூழிய குற்றங்களுக்கு வழிவகுக்கும்“ என்றும் அவர் எச்சரித்தார்.
ஹமாஸ் மீதான இஸ்ரேலின் போர் ஒக்டோபர் 7ஆம் திகதி தொடங்கியதில் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் வன்முறைகள் அதிகரித்துள்ளன,.
இதற்கிடையில் Nur Shams இல் பாதிக்கப்பட்ட சிலர் வெளிப்படையான சட்டத்திற்கு புறம்பான மரணதண்டனைகளால் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகத்திற்கு அறிக்கைகள் கிடைத்துள்ளதாகவும் ஷம்தாசனி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.