நாட்டில் இன்று முதல் கடமையில் ஈடுபடுத்தப்படும் விசேட பொலிஸ் படையணி
இலங்கையில் இன்றைய தினம் முதல் விசேட படையணியொன்று கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
போதைப் பொருள் மற்றும் பாதாள உலகக் குழு செயற்பாடுகளை தடுக்கும் நோக்கில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் யுக்திய என்னும் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நடவடிக்கையுடன் இணைந்து விசேட அதிரடிப்படையினரின் மோட்டார் சைக்கிள் படையணியொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இன்று முதல் கடமையில்
100 பேரைக் கொண்ட விசேட படையணிக்கான பயிற்சிகள் பூர்த்தியாகியுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளதோடு இரண்டு வார காலம் இவர்களுக்கு விசேட பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாதாள உலகக் குழு செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த மோட்டார் சைக்கிள் படையணி உருவாக்கப்பட்டுள்ளது.இந்த படையணியானது இன்று முதல் மேல் மற்றும் தென் மாகாணங்களில் கடமையில் ஈடுபடுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குற்றவாளிகளை துரித கதியில் துரத்திச் சென்று கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.