;
Athirady Tamil News

செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா வெளியிட்ட காரணம்

0

கிரீஸ் நாட்டின் தலைநகரமான ஏதென்ஸ் நகரம் செவ்வாய்க்கிழமை (23) திடீரென செம்மஞ்சள் நிறமாக காட்சியளித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புராதன ஒலிம்பிக் மைதானம் அமைந்துள்ள சின்டக்மா சதுக்கம், பார்த்தியான் ஆலயம், லிகாப்பட்டஸ் குன்றுகளை உள்ளடக்கிய பழைய அகோரா, புதிய அகோரா உள்பட ஏதென்ஸ் நகரமே செம்மஞ்சள் நிறமாக மாறி காட்சியளித்தது.

இதனால் சுற்றுலா வந்த வெளிநாட்டவர் மட்டுமின்றி உள்ளூர்வாசிகளும் அச்சத்திற்குள்ளாகினர்.

செவ்வாய்க் கிரகம் போல் காட்சி
இதேவேளை டூர்கோவூனியா மலை, புனித குன்றுகளை கொண்ட அக்ரோபோலிஸ் ஆகியவையும் செவ்வாய்க் கிரகத்தை பிரதிபலிப்பதுபோல காட்சியளித்தன.

இந்தநிலையில் ஏதென்ஸ் நகரின் இந்த மாற்றத்துக்கு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா விளக்கம் கொடுத்துள்ளது.

அதாவது, வட ஆபிரிக்காவில் இருந்து கிரீஸ், சிப்ரஸ், மாசிடோனியோ உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தக் காலத்தில் மேக கூட்டங்கள் நகருவது வழமை.

புழுதி புயல் தாக்கியது
இந்தநிலையில் அசாதாரணமாக இந்த மேக கூட்டத்துடன் சகாரா பாலைவனத்தின் மண்துகள்கள் கலந்ததால் கிரீஸ் நாட்டை செம்மஞ்சள் நிற போர்வை போர்த்தியதுபோல புழுதி புயல் தாக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2 நாட்களுக்கு இந்தநிலை நீடிக்கும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்தநிலையில் செம்மஞ்சள் நிறமாக மாறிய ஏதென்ஸ் நகரின் படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.

ஒலிம்பிக் போட்டிகளின் தாயகம்
ஐரோப்பா கண்டத்தின் முக்கிய நாடுகளில் ஒன்றான கிரீஸ் நாட்டின் தலைநகரம் ஏதென்ஸ் பல்வேறு சிறப்புகளுக்கு பெயர்போனதாக விளங்கி வருவதுடன் உலகின் மிகவும் தொன்மையான நகரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

அத்துடன் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கிரேக்க சாம்ராஜ்ஜியத்தின் மையப்புள்ளியாக விளங்குகிறது.

நவீன ஒலிம்பிக் போட்டிகளின் தாயகமாக விளங்கும் இந்த நாட்டில் பல்வேறு சிறப்புவாய்ந்த நினைவுச் சின்னங்களும், புராதன கட்டிடங்களும் உள்ளன.

பண்டைய காலம் முதலே வெளிநாட்டினரும் சுற்றுலா பயணிகளும் விரும்பி செல்லும் நகரமாக ஏதென்ஸ் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.