Romance Scam: ஜேர்மனியில் திருமண ஆசையில் கோடிக்கணக்கில் பணத்தை இழந்த நபர்கள்
ஜேர்மனியில், திருமண ஆசைகாட்டி கோடிக்கணக்கில் மோசடி செய்த ஒரு குழுவைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Romance Scam
சமீப காலமாக Romance scam அல்லது dating scam என்னும் மோசடி அதிகரித்துவருகிறது. உலக நாடுகள் பலவற்றில் இந்த மோசடியில் ஏராளமானோர் சிக்குகிறார்கள். திருமண வயது தாண்டியும் திருமணம் ஆகாதவர்கள், துணையைப் பிரிந்தவர்கள் என ஏராளமானோர் இந்த மோசடியில் சிக்கி கோடிக்கணக்கில் பணத்தை இழந்துவருகிறார்கள்.
அதாவது, சமூக ஊடகங்கள் மற்றும் டேட்டிங் தளங்களில் போலியான புகைப்படம் மற்றும் விவரங்களை வெளியிட்டு, காதலிப்பது போல் நடித்து, நம்பிக்கையைப் பெற்றபின், பண உதவி செய்யுமாறு கேட்டு, பணம் கைக்கு வந்ததும் தலைமறைவாகிவிடும் ஒரு பெரிய கூட்டம் உலகம் முழுவதும் உள்ளது.
11 பேர் கைது
அவ்வகையில், ஜேர்மனியின் பவேரியா மாகாணத்தில் மட்டும், அதுவும், 2023ஆம் ஆண்டில் மட்டும், 450 மோசடிகள் நிகழ்ந்துள்ளன. மோசடியாளர்களிடம் சிக்கியவர்கள் இழந்த தொகை, சுமார் 5.3 மில்லியன் யூரோக்கள். அதாவது, இலங்கை மதிப்பில் 1,69,21,94,238.01 ரூபாய்.
இந்த மோசடி தொடர்பாக, ஜேர்மன் பொலிசார், நாடு முழுவதும் ரெய்டுகள் நடத்தினார்கள். அந்த ரெய்டுகளில், the Black Axe எனப்படும் நைஜீரிய கும்பலுடன் தொடர்புடைய 11 பேர் சிக்கியுள்ளனர். இந்த கும்பல், ஆட்கடத்தல், மோசடி, பாலியல் தொழில் மற்றும் போதைக்கடத்தல் ஆகிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய கும்பல் என்பது குறிப்பிடத்தக்கது.