1, 2-லாம் இல்லை; தமிழகத்தில் மொத்தம் 15 இடங்களை பிடிப்போம் – பாஜக உறுதி!
தமிழகத்தில் 15 இடங்களை கைப்பற்றுவோம் என பாஜக மாநிலத் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஏ.ஜி.சம்பத்
விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில், கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் ஏ.ஜி.சம்பத் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ”காங்கிரஸ் கட்சி அறிவித்திருக்கும் சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு என்பது எந்தவிதமான சட்ட அங்கீகாரமும் இல்லாத புள்ளிவிவரங்களைத் திரட்டும் நடைமுறை ஆகும்.
இந்த முறையில் திரட்டப்படும் புள்ளிவிவரங்கள் துல்லியமாக இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. சனாதனத்தை அழிப்பேன் என்று கூறிய உதயநிதியைக் கண்டிக்காமல் மோடியை பிரிவினைவாதம், மதவாதம் என்று பேசுகிறார் என்று விமர்சிக்கிறார்கள்.
பாஜகவிற்கு 15 இடம்
அக்பருதின் ஓவைஸி எனும் ஒரு மதத்தலைவர் ‘காவல்துறை 15 நிமிடம் ஒதுங்கிக்கொண்டால் 100 கோடி இந்துகளை அழித்துவிடுகிறேன்’ என்று பேசியுள்ளார். இதை இந்நாடு சகித்துக்கொண்டுள்ளது.
தமிழகத்தில் பாஜக கூட்டணி வெற்றி என்பது பத்திரிகையாளர்களின் கணிப்பில் 12 தொகுதிகளாகும், எங்கள் கணிப்பில் 15 தொகுதிகளில் வெற்றி பெறும்.
மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவில் ஒருவர் கொல்லப்பட்டது சட்டம் – ஒழுங்கு எந்த அளவுக்கு சீர் கெட்டுள்ளது என்பதற்கு உதாரணமாகும்” எனத் தெரிவித்துள்ளார்.