;
Athirady Tamil News

பிரதமர் மோடி, ராகுல் காந்தி மீது புகார் – தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

0

பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆகியோர் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அளிக்கப்பட்ட புகார்கள் தொடர்பாக அவர்களின் கட்சித் தலைவர்களிடம் விளக்கம் கோரியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.

அரசியல் கட்சிகள் தான் தங்களது நட்சத்திரப் பேச்சாளர்களின் பேச்சுக்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்ற கருத்தை ஆணையம் எடுத்துள்ளது. அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி மீதான புகார்கள் குறித்து பாஜக தலைவர் ஜெ.பி. நட்டாவுக்கும், ராகுல் காந்தி மீதான புகார்கள் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

பிரதமர் மோடியின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றாலும், நட்டாவுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் தாக்கல் செய்த புகார்கள் உள்ளன. அவற்றில் ஒன்று, ராஜஸ்தானின் பன்ஸ்வாராவில் மோடி இஸ்லாமியர்களைப் பற்றி குறிப்பிட்டு, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், நாட்டின் செல்வத்தை “ஊடுருவாளர்கள்” என்று கூறியது தொடர்பான குற்றச்சாட்டு உள்ளது.

கார்கேவுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், அவரும், ராகுல் காந்தியும் தேர்தல் விதிகளை மீறியதாகக் கூறி பாஜகவின் குற்றச்சாட்டுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. ஏப்ரல் 18ஆம் தேதி கோட்டயத்தில் ராகுல் காந்தி ஆற்றிய உரையில், ​ஒரு நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்று பிரதமர் மோடி மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக குற்றச்சாட்டு உள்ளது.

மேலும், ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அழைக்காதது அவர் பழங்குடியினரைச் சேர்ந்தவர் என்று கார்கே குறிப்பிட்டது குறித்தும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இருகட்சி தலைவர்களும் ஏப்ரல் 29ஆம் தேதி காலை 11 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதனிடையே, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நேரில் விளக்கத் தயாராக இருப்பதாகக் கூறி, பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். அதில், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பலன் பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் இருப்பதாகவும், இதிலிருந்து ஒரு சில வார்த்தைகளை மட்டும் எடுத்துக்கொண்டு, அதை வைத்து பிரிவினையை ஏற்படுத்துவது பிரதமருக்கு வழக்கமாகிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு பேசுவது, நீங்கள் வகிக்கும் பதவியின் மாண்பைக் குறைக்கும் வகையில் இருப்பதாக கூறியுள்ளார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாத அம்சங்களை தங்களது ஆலோசகர்கள் கூறியிருப்பதாகவும், பிரதமர் இனி பொய்யான அறிக்கைகளை வெளியிடக் கூடாது என்பதற்காகவே, தான் நேரில் சந்தித்து விளக்கம் தர விரும்புவதாகவும் கார்கே தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.