உக்ரைன் பயம்… ரஷ்யாவின் மதிப்புமிக்க ராணுவ அணிவகுப்புகளை ரத்து செய்த புடின்
ரஷ்யாவில் ஆண்டு தோறும் முன்னெடுக்கப்படும் மே 9ம் திகதி ராணுவ அணிவகுப்புகளை நாடு முழுவதும் ரத்து செய்வதாக ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.
மதிப்புமிக்க ராணுவ அணிவகுப்பு
உக்ரைன் ட்ரோன் தாக்குதலுக்கு பயந்து அவர் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம் என்றே கூறப்படுகிறது. ரஷ்யாவின் மே 9 மதிப்புமிக்க ராணுவ அணிவகுப்பானது சமீபத்திய ஆண்டுகளில் ரத்து செய்யப்பட்டதில்லை என்றே கூறுகின்றனர்.
இந்த நிலையில் நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் அணிவகுப்பு ரத்து செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றனர். 2ம் உலகப் போரில் நாஜி ஜேர்மனியை தோற்கடித்த நாளை, நாடு முழுவதும் ரஷ்யர்கள் மே 9ம் திகதி மிக விமரிசையாக கொண்டாடி வந்துள்ளனர்.
அந்த நாளில் தலைநகர் மாஸ்கோவில் முன்னெடுக்கப்படும் அணிவகுப்பில் தமது ராணுவ வலிமையை ரஷ்யா உலகிற்கு வெளிப்படுத்தியும் வந்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் மாஸ்கோவில் மட்டும் முன்னெடுக்கப்படுகிறது.
போருக்கு எதிரான ஆர்ப்பாட்டமாக
எஞ்சிய அனைத்து பிராந்திய கொண்டாட்டங்களும் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. உக்ரைனுக்கு மிக அருகாமையில் அமைந்துள்ள elgorod, Bryansk, Pskov, Ryazan, Kursk மற்றும் Saratov பிராந்தியங்களில் மொத்த விழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான தாக்குதலுக்கு முன்னர், மே 9ம் திகதி நாடே விழாக்கோலம் கொண்டு, ஒவ்வொரு நகரத்திலும் மக்கள் ஊர்வலம் செல்வார்கள். தற்போது இந்த ஊர்வலங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, இந்த ஊர்வலங்கள் சில வேளை போருக்கு எதிரான ஆர்ப்பாட்டமாக மாறவும் வாய்ப்பிருப்பதாக புடின் நிர்வாகம் அச்சம் கொண்டுள்ளது.
கடந்த ஆண்டும் மே 9ம் திகதி விழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, மாஸ்கோவில் மட்டும் பெயரளவில் ராணுவ அணிவகுப்பு முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.