எரிபொருள் விலையில் ஏற்படக்கூடிய மாற்றம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்தாலும் எமது கட்டணத்தில் மாற்றம் ஏற்படாது என மின்சக்தி மற்றும் வலு சக்தி இராஜாங்க அமைச்சர் டீ.வி.சானக அறிவித்துள்ளார்.
நிலையான நாட்டிற்கு ஒரே பாதை என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (26) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
எரிபொருள் இறக்குமதி
எரிசக்தி துறையுடன் தொடர்புடைய இறக்குமதி, தரம், விநியோகம் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றிற்கு ஒரு சுயாதீனமான ஒழுங்குமுறை அமைப்பின் அவசியத்தை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.
மேலும் இந்த சுயாதீன அமைப்பை நிறுவுவதன் நோக்கம், நாட்டில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல், ஜெட் எரிபொருள், எல்பிஜி, எல்என்ஜி மற்றும் மசகு எண்ணெய் ஆகியவற்றின் தரம், விநியோகப் போட்டி மற்றும் விலைகளை ஒழுங்குபடுத்துவதாகும்.
வாடிக்கையாளர்களுக்கு வழக்கமான மற்றும் நியாயமான விலையில் பொருட்களை வழங்க இது உதவும் என்பதையும் குறிப்பிட வேண்டும். அதற்கான பிரதான கட்டமைப்பை தயாரிப்பதற்கு தேவையான தகவல்கள் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளன.
எரிபொருள் விலையில் ஏற்படக்கூடிய மாற்றம்
மேலும், உலக சந்தை நிலவரங்கள் மற்றும் எரிபொருள் விலையில் ஏற்படக்கூடிய மாற்றங்களை உணர்ந்து, அடுத்த 6 மாதங்களுக்கு எரிபொருளை கொள்வனவு செய்வதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது.
இம்மாதம் 30ம் திகதியும், அடுத்த மாதம் 13ம் திகதியும் மேலும் இரண்டு மாதங்களுக்கு டெண்டர் விடப்படும். அதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான தேவையான எரிபொருளின் தவணைகள் நிறைவு செய்யப்படும்.
உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்தாலும் எமது கட்டணத்தில் மாற்றம் ஏற்படாது என்பதையும் குறிப்பிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.