தமிழகத்தில் வீசப்போகும் வெப்ப அலை! மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, பீகார், உத்தரபிரதேசம், தெலுங்கானா, கோவா ஆகிய மாநிலங்களில் வெப்ப அலை வீசும் என அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
வெயிலின் தாக்கம்
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்துள்ள நிலையில், இந்த ஆண்டு வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அடிக்கடி வெப்ப அலை வீசும்.
நாளாந்தம் வெயிலின் உக்கிரம் அதிகரித்து வருகிறது. அதிகரிக்கும் வெப்ப நிலை காரணமாக பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் அவதானத்துடன் செயல்பட வேண்டும்.
இதனால் பகல் நேரங்களில் சுட்டெரிக்கும் வெயிலால் வெளியே செல்ல முடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.
வெப்ப அலை
தமிழகத்தின் சில பகுதிகளில் நாளை வெப்ப அலை வீசும். இந்த வெப்ப அலை மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
அத்துடன், தமிழகத்தில் சில பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும். இதன் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும்.
எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் மே மாதம் 1 ஆம் திகதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
மற்ற தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்” என எச்சரித்துள்ளது.