இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படவுள்ள மாற்றம்: மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கை
இலங்கையின் பொருளாதாரம் இவ்வருடம் (2024) 3 வீதத்தால் வளர்ச்சியடையும் என இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) கணித்துள்ளது.
புதிய மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் முதன்முறையாக வெளியிடப்பட்ட மத்திய வங்கியின் ‘வருடாந்திர பொருளாதார வர்ணனை’ அறிக்கையில் (2023) இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, பணவியல் கொள்கை தளர்த்தலின் பலன்களின் தொடர்ச்சியான ஓட்டம் மற்றும் பொருளாதாரத்திற்கான குறைந்த பணவீக்கச் சூழல் மற்றும் பொருளாதாரம் கடந்த ஆண்டு (2023) 2.3 சதவிகிதம் சுருங்கியமை போன்ற காரணிகளால் இந்த பொருளாதார வளர்ச்சி பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பொருளாதார மந்தநிலை
மேலும், தொடர்ந்து ஆறு (06) காலாண்டுகளாக மந்தநிலையில் இருந்த பொருளாதாரம், 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது ஆறு மாதங்களில் நேர்மறையான பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகவும், பொருளாதார செயல்திறன் மற்றும் பொருளாதார மீட்சி வரும் காலத்திலும் தொடரும் என்றும் வருடாந்திர பொருளாதார வர்ணனை காட்டுகின்றது.
2024 மற்றும் அதற்குப் பின்னரான வெளிநாட்டுத் துறையின் கண்ணோட்டம் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பை வெற்றிகரமாக முடிப்பது மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள சீர்திருத்தங்களின் தொடர்ச்சி ஆகியவற்றைச் சார்ந்துள்ளது என்று அறிக்கை மேலும் வலியுறுத்தியுள்ளது.
இதற்கமைய, மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கைக்குப் பதிலாக, ‘வருடாந்திர பொருளாதார வர்ணனை’ என்ற இந்த அறிக்கை தொடர்ந்து வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.