எரிபொருள் விலையில் மாற்றம்: இலக்கு வைக்கப்படும் ஜனாதிபதி தேர்தல்
இலாப வரம்பில் நெகிழ்வுத்தன்மையை அனுமதிக்கும் வகையில், மாதத்திற்கு ஒருமுறை எரிபொருளின் விலையை நிர்ணயிக்கும்விதமாக எரிபொருள் விலை சூத்திரத்தை மாற்றியுள்ளதாக, எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி. வி சானக்க(D.V. Chanaka) தெரிவித்துள்ளார்.
இதன்படி எரிபொருள் சில்லறை விற்பனையாளர்கள் தங்கள் இலாப வரம்பை 0-4 சதவீதத்தில் இருந்து தேர்வு செய்யலாம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த வருட இறுதியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இலாப வரம்பு நிர்ணயம்
முன்னதாக இந்த நிலையான இலாப வரம்பு 4 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
எனினும் இலங்கை கடந்த முறை மார்ச் 31 ஆம் திகதி விலையை திருத்திய போது பரவலாக பயன்படுத்தப்படும் ஒக்டேன் 92 மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையை மாற்றவில்லை.
மேலும், தனியார் எரிபொருள் சில்லறை விற்பனையாளர்களான லங்கா இந்தியன் ஒயில் கோர்ப்பரேசன் மற்றும் சினோபெக் ஆகியவை பொதுவாக அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையை பின்பற்றுகின்றன என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.