;
Athirady Tamil News

உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்பு மீது ரஷ்யா சரமாரி தாக்குதல்

0

உக்ரைன் நாட்டின் மீது சனிக்கிழமை இரவில் ரஷ்யா சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் மற்றும் மேற்கு பகுதியில் உள்ள இவானோ-பிராங்கிவ்ஸ்க் நகரங்களை குறிவைத்து 30இற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ரஷ்யா வீசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அவற்றில் சுமார் 20 ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து அழித்ததாகவும் உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது.

4 அனல்மின் நிலையங்கள் சேதம்
அந்த நகரங்களில் உள்ள அனல்மின் நிலையங்களை இலக்காக வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் 4 அனல்மின் நிலையங்கள் கடுமையாக சேதம் அடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக உக்ரைனின் மின் உற்பத்தி நிலையங்களை குறிவைத்து ரஷ்யா தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இதனால் உக்ரைனின் பல நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இலட்சக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரஷ்யாவின் தொடர் எச்சரிக்கைகளை மீறி, நேட்டோ அமைப்பில் இணைவதற்கான முயற்சிகளை உக்ரைன் முன்னெடுத்ததால் அந்த நாட்டின் மீது கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ரஷ்யா போர் தொடுத்தது.

உக்ரைன் ரஷ்யா போர்
இந்தப் போரில் அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு தேவையான இராணுவ மற்றும் நிதி உதவிகளை வழங்கி பக்கபலமாக இருந்து வருகின்றன.

இதன் மூலம் உக்ரைன், ரஷ்யாவை எதிர்த்து தொடர்ந்து சண்டையிட்டு வருவதுடன் ரஷ்யாவும் இலக்கை எட்டும் வரையில் பின்வாங்க போவதில்லை என கூறி போரை தொடர்ந்து வருகிறது.

இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையிலான போர் தொடர்ந்து உக்கிரமடைந்து வருகிறது.

தற்போதைய போரில் ரஷ்யா வசம் உள்ள உக்ரைன் நகரங்களை மீட்பதற்காக உக்ரைன் இராணுவம் சண்டையிட்டு வருவதுடன் அதே சமயம் உக்ரைனின் மற்ற நகரங்களை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா தனது தாக்குதல்களை விரிவுபடுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.