ராஜஸ்தானில் ஒரே கல்லில் 18 அடி உயர காளி சிலை வடிப்பு
ராஜஸ்தானில் ஒற்றை பளிங்கு (மார்பிள்) கல்லில் 18 அடி உயர காளி சிலை வடிக்கப்பட்டுள்ளது. இச்சிலை கேரளத்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
ராஜஸ்தானின் பைன்ஸ்லானா பகுதியைச் சேர்ந்த 30 அடி நீளமும் 20 அடி அகலமும் கொண்ட பளிங்குக் கல்லில் 18 அடி உயர காளி சிலையை ஜெய்பூரைச் சேர்ந்த சிற்பி முகேஷ் பரத்வாஜ் வடித்துள்ளார். சுமார் 50 டன் எடை கொண்ட இந்தச் சிலை, கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள பௌர்ணமிகாவு கோயிலில் 12 அடி உயர துர்கை மற்றும் ராஜமாதங்கி சிலைகளுக்கு அருகில் நிறுவப்பட உள்ளது. பீடத்துடன் சேர்த்து காளி சிலையின் உயரம் 23 அடியாகும். இது தொடர்பாக பௌர்ணமிகாவு கோயிலின் தலைமை அறங்காவலர் எம்.எஸ்.புவனசந்திரன் கூறியதாவது:
ராஜஸ்தானில் இருந்து காளி, துர்கை, லட்சுமி ஆகிய மூன்று சிலைகள் கேரளத்துக்கு வர உள்ளன. அயோத்தியில் நடைபெற்ற பிராண பிரதிஷ்டை விழாவைப் போன்று கேரளத்தின் திருவனந்தபுரம், வெங்கன்னூர் பகுதியில் உள்ள கோயிலில் இச்சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன என்றார்.
இச்சிலைகள் தங்களின் வாகனங்களான சிங்கம், புலி, மயில், அன்னப்பறவை ஆகிய சிலைகளுடன் ஜெய்பூரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு சாலை மார்க்கமாக அனுப்பிவைக்கப்பட உள்ளன. இவை திங்கள்கிழமை புறப்பட உள்ளன.
பால திரிபுரசுந்தரி தேவி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள பௌர்ணமிகாவு கோயிலில் உலகிலேயே மிகப்பெரிய பஞ்சமுக கணேசர் சிலையும் 51 அக்ஷர தேவதைகளின் சிலைகளும் அமைந்துள்ளன.
நாட்டிலேயே அக்ஷர தேவதைகளுக்கான தனிக் கோயிலாக பௌர்ணமிகாவு கோயில் உள்ளது.