நாவிதன்வெளி பிரதேச செயலகம் நடாத்திய சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா – றாணமடு இந்து கல்லூரி மைதானத்தில்
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பிரதம அதிதியாக பங்கேற்பு
(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் நாவிதன்வெளி பிரதேச செயலகம் என்பன ஒன்றிணைந்து பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்துடன் இணைந்து நடாத்திய சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா (28) றாணமடு இந்து கல்லூரி மைதானத்தில் பிரதேச செயலாளர் ஆர். ராகுலநாயகி சஜிந்திரன் தலைமையில் நடைபெற்றது.
ஸ்மார்ட் யூத் – SMART YOUTH இளைஞர் சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழாவாக நடைபெற்ற இந்த நிகழ்வுகளுக்கு அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு விளையாட்டு விழாவினை ஆரம்பித்து வைத்தார்.
பாரம்பரிய புத்தாக்க பண்பாட்டுக் கலை கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் விளையாட்டு விழாக்கள் இங்கு நடைபெற்றன. இதில் சிறுவர்கள், முதியவர்கள், இளைஞர்கள், ஆண்கள்,பெண்கள் என பல பிரிவினருக்கும் போட்டிகள் வெவ்வேறாக நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அதிதிகளினால் பரிசுகள் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன் பிரதேச மட்ட விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகளில் மாவட்ட மட்டத்தில் வெற்றி பெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் இங்கு மாலை அணிவிக்கப்பட்டு நினைவுச்சின்னம் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருக்கு நாவிதன்வெளி பிரதேச செயலகத்தினால், தனது சேவையை பாராட்டி மாலை அணிவிக்கப்பட்டு, பொன்னாடை போர்த்தி, பாராட்டு பத்திரம் நினைவுச் சின்னமாக வழங்கி கௌரவிக்கப்பட்டன
வரலாற்று சிறப்புமிக்க இந்த சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழாவில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாகாண பணிப்பாளர் எச்.யூ.சுசன்ந்த, நாவிதன்வெளி உதவி பிரதேச செயலாளர் பி. பிரணவரூபன், கால்நடை வைத்திய அதிகாரி டொக்டர் .ஏ.எம். ஜிப்ரி, மத்திய முகாம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.எல்.ஏ.கபூர் நாவிதன்வெளி அன்னமலை இராணுவ முகாம் பதில் கட்டளை இடும் அதிகாரி ராணுக்க ரணவீர, பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி திலகராணி கிருபைராஜா, தேசிய இளைஞர்கள் சேவை மன்றத்தின் அம்பாறை மாவட்ட உத்தியோகத்தர் கமல் நிஷாந்த, மத்தியமுகாம் றாணமடு இந்துக் கல்லூரி அதிபர் கே. கதிரைநாதன், பிரதேச சபை செயலாளர் பி. சதீஸ்கரன், இளைஞர் சேவைகள் மன்றத்தின் சாய்ந்தமருது அலுவலக பொறுப்பதிகாரி எ.அமீர் சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் எஸ். சிவம், விளையாட்டு உத்தியோகத்தர் பி.வசந்த், இளைஞர் சேவை உத்தியோகத்தர் எஸ். ராதிந் உட்பட பிரதேச செயலக விளையாட்டு கழகங்கள், இளைஞர் கழகங்கள், பொதுமக்கள், மாணவர்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.