காசா போர் தொடர்பில் அதிகரிக்கும் சர்வதேச அழுத்தம் : பெஞ்சமின் நெதன்யாகு பகிரங்கம்
இஸ்ரேல் – காசா போர் தொடர்பில் சர்வதேச அழுத்தம் அதிகரித்துள்ள நிலையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் கைதாணை பிறப்பிக்கப்படலாம் என்ற அச்சத்தில் இஸ்ரேலிய தலைவர்கள் கவலை கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2014ல் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படைகள் நடத்திய போர் குற்றங்கள் தொடர்பில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணையை தொடங்கியது.
ஆனால் கைது நடவடிக்கை தொடர்பில் இதுவரை தகவலேதும் வெளியாகவில்லை. நீதிமன்றமும் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கவில்லை.
ஆனால் இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவிக்கையில், நாட்டின் மூத்த அரசியல்வாதிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் மீது கைதாணை வெளியாகலாம் என்ற தகவல் கசிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் அடிபணியாது
அதுமட்டுமின்றி, அப்படியான ஒரு சூழலை நீதிமன்றம் தவிர்க்க வேண்டும் என்றும், அது ஹமாஸ் போன்ற பல்வேறு ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவாக அமையும் என்றார். கைதாணை தொடர்பான தகவல் கசிந்த காரணத்தால், தற்போது இஸ்ரேலிய தரப்பில் இருந்து அதிக உதவிகளை காசா பகுதிக்கு முன்னெடுக்க பலர் ஆர்வமாக உள்ளனர்.
ஆனால், இஸ்ரேலின் தற்காப்பு உரிமையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் எந்த முயற்சியையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய கிழக்கின் ஒரே ஒரு ஜனநாயக நாடு, உலகின் ஒரே ஒரு யூத அரசின் வீரர்கள் மற்றும் அதிகாரிகளை முடக்கும் இந்த அச்சுறுத்தல் மூர்க்கத்தனமானது என்றும் நெதன்யாகு பதிலளித்துள்ளார்.
அத்துடன், இஸ்ரேல் ஒருபோதும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அடிபணியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.