தில்லியில் 60 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
புதுதில்லி: தில்லி, தேசிய தலைநகர் வலயப் பகுதிகளில் (என்சிஆர்) அமைந்துள்ள பள்ளிகளுக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
சுமார் 60-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் புதன்கிழமை காலை வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தீயணைப்புத் துறையின் இயக்குநர் அதுல் கார்க் உறுதி செய்துள்ளார்.
மேலும், அனைத்துப் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டு வெடிகுண்டு நிபுணர்களுடன் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சோதனை செய்தனர்.
–
இந்த சோதனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தில்லி காவல் துணை கண்காணிப்பாளர், “அனைத்து பள்ளிகளையும் சோதனை செய்துவிட்டோம். வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி, மக்கள் பதற்றமடைய வேண்டாம்” என்று தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, மிரட்டல் வந்த ஒரு பள்ளியில் ஆய்வு நடத்திய தில்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மிரட்டல் விடுக்கப்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் இன்று அதிகாலை 4.15 மணியளவில் ஒரே மின்னஞ்சல் முகவரியில் இருந்து மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டலை தொடர்ந்து, அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மாணவர்கள் பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும், மிரட்டல் விடுக்கப்பட்ட நபர் குறித்து விரிவான விசாரணையை தில்லி காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.