இன்ஃப்ளூயன்ஸா: மத்திய அரசு தீவிர கண்காணிப்பு
இன்ஃப்ளூயன்ஸா தீநுண்மியால் (வைரஸ்) ஏற்படும் பருவகால காய்ச்சல் நிலைமையை பல்வேறு மாநிலங்களில் நிகழ்நேர அடிப்படையில் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக மத்திய சுகாதாரம், குடும்ப நலத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பருவகால காய்ச்சல் என்பது இன்ஃப்ளூயன்ஸா தீநுண்மியால் ஏற்படும் கடுமையான சுவாச நோய்த்தொற்று ஆகும். இது உலகின் அனைத்துப் பகுதிகளிலும் பரவுகிறது. ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவில் இந்த பருவகால காய்ச்சல் இரண்டு உச்சநிலைகள் காணப்படுகின்றன. ஜனவரி முதல் மார்ச் வரை மற்றும் மழைக்காலத்திற்குப் பிந்தைய காலத்திலும் இது ஏற்படுகிறது.
இருப்பினும், தற்போதைய நிலவரப்படி, நாட்டின் எந்தப் பகுதியிலும் இந்த பருவகால காய்ச்சல் அசாதாரணமான ஆபத்து வரலாம். இப்போது அதிகரிப்பு இல்லை. ஆனால், முன்னெச்சரிக்கை தேவை. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கால்நடைகள் மற்றும் பாலில் ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா தீநுண்மி கண்டறியப்பட்டுள்ளது. தற்போது வெளியான இந்தச் செய்தியை கருத்தில் கொண்டு, கடந்த ஏப்ரல் 28 – ஆம் தேதி மத்திய சுகாதார சேவைகள் இயக்குநர் ஜெனரல் தலைமையில் காணொலி வழியாக கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலக் கால்நடை பராமரிப்பு ஆணையர்கள், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தலைமையகம், புணேவில் உள்ள ஐசிஎம்ஆர்- தேசிய தீநுண்மியியல் நிறுவன அதிகாரிகள், முக்கிய மாநில மாவட்டக் கண்காணிப்பு பிரிவு சுகாதார அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில் முறையான சுகாதார நடைமுறைகளைப் பயன்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. பால் காய்ச்சுதல், போதுமான வெப்பநிலையில் இறைச்சியை சரியான முறையில் சமைப்பது போன்றவற்றின் மூலம் இதில் உள்ள தீநுண்மி மனிதர்களுக்கு பரவுவதைத் தடுக்க உதவும் என நிபுணர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், நாடு தழுவிய ஆய்வக நெட்வொர்க் மூலம் நிகழ் நேர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள ஐசிஎம்ஆர் ஆய்வகங்களின் நெட்வொர்க்கில் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தோடு இணைக்கப்பட்டுள்ள உள் மற்றும் வெளிநோயாளிப் பிரிவுகள், ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டம் போன்றவை இணைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
இவற்றின் மூலம் இன்ஃப்ளூயன்ஸா (ஐஎல்ஐ) மற்றும் கடுமையான சுவாச நோய்த்தொற்றுகள் போன்ற இன்ஃப்ளூயன்ஸாவின் நிகழ்நேர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
பொது சுகாதார நடவடிக்கைகள்: மேலும் பருவகால காய்ச்சலுக்கான வழிகாட்டுதல்கள், நோயாளிகளின் வகைப்பாடு, சிகிச்சை நெறிமுறை போன்ற வழிகாட்டுதல்களை மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் இணையதளத்திலும் (www.mohfw.nic.in) வைக்கப்பட்டுள்ளது.
ஹெச்1என்1 போன்ற பாதிப்புகளைக் கையாளும் சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, நிலைமை கட்டுக்குள் உள்ளது.
இருப்பினும், பருவகால மற்றும் பறவைக் காய்ச்சல் தீநுண்மி குறித்து மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் கோடைகால நோய்களுக்கு மத்தியில் பறவைக் காய்ச்சலின் பாதிப்பு கேரளம், ஆந்திரம், ஒடிஸா போன்ற மாநிலங்களில் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.