பேருந்துக் கட்டணக் குறைப்பு தொடர்பில் வெளியான அறிவித்தல்
நாட்டின் மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்துக்கு அமைய டீசல் விலை குறைந்தாலும் பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன (Gemunu Wijeratne) தெரிவித்துள்ளார்.
வருடாந்த விலை சூத்திரத்துக்கு அமையவே பேருந்து கட்டணத்தை திருத்தம் செய்ய முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே எதிர்வரும் ஜூலை மாதத்தில் கட்டண திருத்தம் தொடர்பில் கவனம் செலுத்தலாம் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.’
பேருந்து உதிரிப்பாகங்களின் விலை
எரிபொருளை காட்டிலும் பேருந்து உதிரிப்பாகங்களின் விலைகள் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டு அவற்றுக்கு விசேட வரிகளும் விதிக்கப்படுகின்றன என தெரிவித்தார்.
ஆகவே உதிரிப்பாகங்களின் விலையை குறைக்குமாறு அரசாங்கத்திடம் பலமுறை வலியுறுத்தினோம். இருப்பினும் அதனை அரசாங்கம் கவனத்திற் கொள்ளவில்லை என கூறினார்.
ஆகவே தற்போதைய விலை குறைப்பின் நிவாரணத்தை பொது பயணிகளுக்கு வழங்க முடியாது என அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்துக்கு அமைய நேற்று (30) நள்ளிரவு முதல் டீசலின் விலை 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.