;
Athirady Tamil News

இலங்கையிலுள்ள வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கான தகவல்

0

கடன் பெறுநர்களால் மீள செலுத்தாமல் தவறவிடப்பட்ட கடன்களை அறவிடும் வகையில் அந்தக் கடனுக்கு பிணைப் பொறுப்பாக வங்கிக்கு ஈடுவைக்கப்பட்ட ஏதேனும் ஆதனத்தை பகிரங்க ஏல விற்பனை மூலம் விற்பனை செய்வதற்கு வங்கிகளால் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்வதற்கான 1990 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்கள் அறவிடுதல் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தைத் (பராட்டே சட்டம்) டிசம்பர் 15ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கான வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்கள் அறவிடுதல் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்டமூலத்துக்கு நிபந்தனைகளுக்கு அமைய அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.

அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா தலைமையில் அண்மையில் நாடாளுமன்றத்தில் கூடிய போதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்காலிக நிவாரணம்
இதன்போது நிதி அமைச்சைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட அதிகாரிகள் குறிப்பிடுகையில், கடன் பெறுநர்களுக்கு தற்காலிகமான நிவாரணமொன்றை வழங்க இதன்மூலம் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தனர்.

அதற்கமைய டிசம்பர் 15இன் பின்னர் இது தொடர்பில் எந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என குழு வினவியது. கலந்து கொண்ட அதிகாரிகள் இது தொடர்பில் தெளிவான பதிலை வழங்கத் தவறியதால் டிசம்பர் 15இன் பின்னரான காலப்பகுதியில் பராட்டே சட்டத்தின் கீழ் வருபவர்கள் தொடர்பில் எடுக்கும் நடவடிக்கை தொடர்பில் வழிகாட்டலை வழங்குமாறு குழு பரிந்துரை வழங்கியது.

அத்துடன் பராட்டே சட்டத்தின் கீழ் வங்கிகளுடன் கொடுக்கல் வாங்கல் செய்துகொண்டுள்ள அனைத்துத் தரப்பினருக்கும் வங்கிகளுடன் கலந்துரையாடுவதற்கு நியாயமான சந்தர்ப்பம் வழங்குமாறும் குழு இதன்போது பரிந்துரை வழங்கியது. மேலும் பராட்டே சட்டத்தின் கீழ் கடன் பெறுவது வகைப்படுத்தப்படும் முறை தொடர்பில் அதிகாரிகளிடம் குழு வினவியது.

விசேடமாக நுண், சிறு மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகர்கள் இந்த சட்டத்தின் கீழ் கடன்களை பெற்றுள்ள முறை மற்றும் இவ்வாறு வகைப்படுத்தல் எந்த அளவுகோல்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது தொடர்பிலும் குழுவின் தலைவர் வினவினார். இது தொடர்பான சரியான தரவுகள் அதிகாரிகளிடம் இருக்கவில்லை என்பதால் அந்தத் தரவுகளை குழுவுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டினார்.

அதிகம் பாதிக்கப்பட்ட துறை
அத்துடன் இங்கு துறைரீதியாக கவனம் செலுத்தும் போது அதிகமாகப் பாதிக்கப்பட்ட துறை எது என்பது தொடர்பில் விகிதாசார ரீதியாக குழுவினால் வினவப்பட்டது.

அத்துடன்இ 2020, 2021 மற்றும் 2022 ஆகிய கோவிட் வைரஸின் தாக்கம் காரணமாக பொருளாதார வீழ்ச்சி நிலவிய விசேடமான கலப்பகுதிக்கு ஒப்பீட்டு ரீதியாக ஏனைய காலப்பகுதியில் பராட்டே சட்டம் நடைமுறைப்படுத்தல் தொடர்பில் தரவுகளை வழங்குமாறும் அதிகாரிகளிடம் குழு வினவியது.

இது தொடர்பான தரவுகளை எதிர்காலத்தில் குழுவுக்கு வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு மேலதிகமாக 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மற்றும் 2021ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகளுக்கும் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது. அத்துடன் 1969ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகளுக்கும் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.