2024ஆம் ஆண்டு மே மாதத்தில் ஜேர்மனியில் நிகழவிருக்கும் சில முக்கிய மாற்றங்கள்
விமான கட்டண உயர்வு முதல், 2024ஆம் ஆண்டு மே மாதத்தில் ஜேர்மனியில் நிகழவிருக்கும் சில முக்கிய மாற்றங்களை இங்கு காணலாம்.
விமான கட்டணம் உயர்வு
மே மாதம் 1ஆம் திகதி முதல், ஜேர்மனியில், விமான கட்டணம் உயர்கிறது. விமானத்துறை வரிகள் முதல் விமான போக்குவரத்து வரிகள் வரை, 20 சதவிகிதம் உயர இருப்பதால் இந்த விமான கட்டணம் உயர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார் விற்பனையில் புதிய விதி
ஜேர்மனியில் இனி கார் விற்பவர்கள், தாங்கள் விற்பனை செய்யும் கார் எவ்வளவு எரிபொருளை செலவிடும், மற்றும் எவ்வளவு பசுமை இல்ல வாயுக்கள் வெளியாகும் என்பதைக் காட்டும் லேபிளை காரில் ஒட்டியிருக்கவேண்டும்.
சுவிட்சர்லாந்துக்குச் செல்வோருக்கு ஒரு அறிவிப்பு
ஜேர்மனியில் வாழ்வோர் சுவிட்சர்லாந்தில் வாகனம் ஓட்டும்போது வேகக்கட்டுப்பாட்டை மீறி பயணித்து பொலிசாரிடம் சிக்கினாலோ அல்லது தவறான இடத்தில் பார்க்கிங் செய்தாலோ, அவர்கள் சுவிட்சர்லாந்தில் அபராதம் செலுத்துவதற்கு பதிலாக, இனி ஜேர்மனியிலேயே அவர்கள் அபராதம் செலுத்தும் வகையில் இருநாடுகளுக்குமிடையே ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளது.
முதியோர் இல்ல ஊழியர்களுக்கொரு மகிழ்ச்சியான செய்தி
முதியோர் இல்ல ஊழியர்களுக்கான ஊதியம், மே 1ஆம் திகதி முதல் உயர இருக்கிறது. அத்துடன், இனி அவர்களுக்கு கூடுதல் விடுமுறையும் கிடைக்க உள்ளது.
புதிய பயோடீசல் நிரப்பும் நிலையங்கள் இம்மாதம் முதல், ஜேர்மனியில் புதிய பயோடீசல் நிரப்பும் நிலையங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. ஆகவே, வாகனம் ஓட்டுவோர், எரிபொருள் நிரப்பும் முன், தங்கள் வாகனம், புதிய எரிபொருளை ஏற்கும் வகையிலானதா என்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும்.
பெர்லினில் இ ஸ்கூட்டர்களுக்கு தடை
ஜேர்மன் தலைநகர் பெர்லினில், மே மாதம் 1ஆம் திகதி முதல் சில இடங்களில் இ ஸ்கூட்டர்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.
அடையாள அட்டைகளில் புதிய அறிமுகம்
ஜேர்மனியில், அடையாள அட்டைகளில் ‘Dr.’ என குறிப்பிடப்படும் விடயம் வெளிநாட்டு எல்லை அதிகாரிகளுக்கு சில நேரங்களில் குழப்பத்தை ஏற்படுத்துவது தெரியவந்துள்ளதால், இனி அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்போர் தாங்கள் முனைவர் பட்டம் பெற்றிருந்தால், அதை தெளிவாகக் குறிப்பிடும் வகையில், மே மாதம் 1ஆம் திகதி முதல் அடையாள அட்டைகளில் அதற்கென தனியாக ஒரு இடம் ஒதுக்கப்பட உள்ளது.