பாம்பு கடித்த இளைஞரை கங்கை நதியில் கட்டி தொங்கவிடப்பட்ட அவலம்.. மூடநம்பிக்கையால் பறிபோன உயிர்
கங்கை நதியில் மிதக்கவிட்டால் பாம்புக்கடி விஷம் நீங்கும் என்ற மூட நம்பிக்கையால், உத்தரபிரதேச மாநிலத்தில் 20 வயது இளைஞரின் உயிர் பறிபோன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புலந்த்சார் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜஹாங்கிராபாத் பகுதியை சேர்ந்த 20 வயது இளைஞர் மோகித் பி.காம் இறுதி ஆண்டு படித்து வந்தார். இவர் தேர்தலில் வாக்கு செலுத்துவதற்காக கடந்த 26ஆம் தேதி தனது வீட்டிற்கு வந்துள்ளார். வாக்களித்தப்பின் வயல்வெளிக்கு சென்ற போது அவரை பாம்பு கடித்தது.
இதையடுத்து உறவினர்கள் அவரை அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றனர். ஆனால், பாம்பு கடி, மருத்துவத்தால் சரியாகாது எனவும், கங்கை நதியில் மிதக்கவிட்டால், விஷம் தானாக இறங்கிவிடும் என்றும் சிலர் கூறியுள்ளனர். இதனை நம்பிய உறவினர்கள், மோகித்தின் உடலில் கயிறுகட்டி கங்கை நதியில் போட்டு வைத்துள்ளனர்.
உயிர் இருக்கிறதா என்பதைக்கூட பரிசோதனை செய்யாமல் கங்கை நதியிலேயே மிதக்கவிடப்பட்ட மோகித் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை மீட்ட அப்பகுதி மக்கள், காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். அவர்கள் வந்து சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.