மன்னாரில் கொடூரமாக தாக்கப்பட்ட நபர் வைத்தியசாலையில் அனுமதி
மன்னார்(mannar) அடம்பன் காவல்பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல் பிட்டி நெடுவரம்பு பகுதியில் சீவல் தொழிலாளி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக மன்னார் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், தாக்குதலுக்கு உள்ளான நபர் அடம்பன் பள்ளிவாசல் பிட்டி நெடுவரம்பு பகுதியில் சீவல் தொழில் செய்து வரும் நிலையில் நேற்று(2) மாலை குறித்த நபரை அடம்பன் காவல்துறையினர் வீதியில் மறித்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
சம்மந்தப்பட்ட நபர் காட்டிறைச்சிகள் விற்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதாக காவல்துறையினர் தெரியப்படுத்தியுள்ளனர்.
கொடூரமாக தாக்கப்பட்ட நபர்
அதனை தொடர்ந்து சம்மந்தப்பட்ட நபர் வேறு நபர் ஒருவருடன் காவல்துறையினர் விசாரித்த விடயம் தொடர்பில் முரண்பட்ட நிலையில் முரண்பட்ட நபரால் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் குறித்த நபரின் வீட்டில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன் போது சந்தேக நபரின் வீட்டில் இருந்து கல் போத்தல் மீட்கப்பட்டுள்ளது இதை அடிப்படையாக கொண்டு குறித்த சீவல் தொழிலாளியை கைது செய்ய முயன்ற நிலையில் ஏற்பட்ட வாய்தர்கத்தின் போதே காவல்துறையினர் பரஸ்பரம் முரண்பட்ட நிலையில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதன் போது ஹான் ஹெப்பினால் தாக்கப்பட்டதாகவும் போலியான வழக்கு தன்மீது போட முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும்,அதன் காரணமாகவே தான் முரண்பட்டதாகவும் காயங்களுக்கு உள்ளான நபர் தெரிவித்திருந்தார்.
வைத்தியசாலையில் அனுமதி
குறித்த விடயம் தொடர்பில் அடம்பன் காவல்துறையினர் தெரிவிக்கையில், காவல்துறையினர் எந்தவித தாக்குதலும் மேற்கொள்ளவில்லை எனவும் சந்தேக நபர் மது போதையில் இருந்ததாகவும் வேறு ஒரு நபர் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ள முயன்றதன் அடிப்படையில் கைது செய்ய முயற்சித்த நிலையிலேயே காவல்துறையினரை சந்தேக நபர் தாக்க முயற்சித்த நிலையில் முரண்பாடு ஏற்பட்டதாகவும் அதன் போது குறித்த நபர் விழுந்து காயம் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பலத்த காயங்களுடன் மன்னார் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தேக நபரை பார்வையிட்ட நீதிபதி சந்தேக நபரை விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை அடம்பன் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.