பாலியல் புகார்; பிரஜ்வல் ரேவண்ணாவை கடவுளுடன் ஒப்பிட்ட அமைச்சர் – வெடிக்கும் சர்ச்சை!
பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணாவை கிருஷ்ணருடன் கர்நாடக அமைச்சர் ராமப்பா திம்மாபூர் ஒப்பிட்டுள்ளார்.
பிரஜ்வல் ரேவண்ணா
மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா. கர்நாடகாவின் ஹாசன் தொகுதியின் தற்போதைய மக்களவை வேட்பாளரான இவர் மீது பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில், பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அவற்றை வீடியோ பதிவு செய்த விவகாரம் வெளியாகி, கர்நாடகா அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.பிரஜ்வல் ரேவண்ணா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க அனைத்து தரப்பினரும் வலியுறுத்திவருகின்றனர்.
வெடிக்கும் சர்ச்சை
இந்த நிலையில் கர்நாடக கலால் துறை அமைச்சர் ராமப்பா திம்மாபூர், பிரஜ்வால் ரேவண்ணாவை, பகவான் கிருஷ்ணருடன் ஒப்பிட்டு பேசியுள்ளது சர்ச்சையாக வெடித்துள்ளது. அண்மையில் விஜயபுராவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், இந்த பெண்ட்ரைவ் பிரச்சினை போல நாட்டில் மோசமாக எதுவும் இல்லை.
இது கின்னஸ் உலக சாதனையை உருவாக்கக்கூடும். ஸ்ரீ கிருஷ்ணர் பல பெண்களுடன் பக்தியுடன் வாழ்ந்தார். பிரஜ்வலின் விஷயம் அப்படி இல்லை. அவர் அந்த சாதனையை முறியடிக்க விரும்புகிறார் என்று நினைக்கிறேன்” இவ்வாறு கூறியது சர்ச்சைக்குள்ளானது. இதற்காக பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.