செல்போன் டார்ச் லைட் வைத்து அறுவை சிகிச்சை – அலட்சியத்தில் பறிபோன உயிர்கள்!
செல்போன் டார்ச் வெளிச்சத்தில் செய்த அறுவை சிகிச்சையால் தாயும் சேயும் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டார்ச் லைட்
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளியான குசுருதீன் அன்சாரி. இவரது மனைவி ஷாஹிதுன்(26) 9 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கடந்த வாரம் வலி ஏற்பட்டதால் அவரை பிரிஹன் மும்பை மாநகராட்சி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் தொடங்கினர். இதற்கான அனுமதியையும் அவரது குடும்பத்தினரிடமும் அவர்கள் அனுமதி பெற்று இருந்தனர்.இதனையடுத்து, சிகிச்சை அரங்குக்குள் அழைத்துச் சென்றபோது, மருத்துவமனை வளாகத்தில் திடீரென மின்சாரம் தடைபட்டுள்ளது.
பறிபோன உயிர்கள்
அப்போது அந்த கூட்டத்தில் இருந்த மருத்துவர் ஒருவர் கையில் இருந்த செல்போன் டார்ச் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு ஷாஹிதுனும் அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதை தொடர்ந்து சுமார் நான்கு நாட்களுக்கு அன்சாரியின் உறவினர்கள், மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இது தங்களுக்கு ஏற்பட்ட மிக பெரிய இழப்பு என்றும், அலட்சியமாக சிகிச்சை செய்த மருத்துவர்கள் தக்க தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தொடர் போராட்டத்திற்கு பிறகு இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த, இன்று பிரிஹன் மும்பை மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பிரிஹன் மும்பை மாநகராட்சி இந்தியாவிலேயே மிகவும் செழிப்பான மாநகராட்சி என்பது குறிப்பிடத்தக்கது.