ரூபாயின் மதிப்பு வலுப்பெற்றதன் பலன் மக்களுக்கு கிடைக்கவில்லை – பொருளாதார ஆய்வாளர்கள்
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வலுப்பெற்றதன் பலன் மக்களுக்கு கிடைக்கவில்லை என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ரூபாவின் பெறுமதியை வலுப்படுத்துவதன் ஊடாக அனைத்து இறக்குமதிப் பொருட்களின் விலைகளையும் குறைத்து அதன் பயனை மக்களுக்கு வழங்க வேண்டும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.
இலங்கையில் ரூபாயின் பெறுமதி பாரிய அளவு வீழ்ச்சியடைந்த காலப்பகுதியில் பருப்பு, கோதுமை மா, பால் மா போன்ற பொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரித்திருந்தது.
டொலர் செலுத்தி இறக்குமதி செய்த பொருட்களின் விலைகளே இவ்வாறு அதிகரித்திருந்தது. எனினும் தற்போது இலங்கை ரூபாயின் பெறமதி அதிகரித்துள்ளது.
அதன் நன்மை இன்னமும் பொது மக்களுக்கு சென்றடையவில்லை என்றே எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இன்னமும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் எதுவும் குறைவடையவில்லை.
பொருளாதாரத்தில் சிறிய அபிவிருத்தி அதிகரித்திருப்பதனை அவதானிக்க முடிந்த போதிலும் இலங்கையின் வருமானத்தை விடவும் செலவு அதிகமாகவே உள்ளது. இன்னமும் ஊழல் மோசடிகள் தொடர்கின்றது.
வெளிநாட்டு கடன்கள் செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படாமையினால் பொருளாதாரம் சற்று நிலையானதாக உள்ளதென தோன்றுகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.