கொழும்பு உட்பட பல பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் உள்ள கடற்பரப்பு தொடர்பில் பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த கடற்பரப்புக்களில் இன்றையதினம் கடல் அலை மேலெழக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடும் எச்சரிக்கை
கற்பிட்டியில் இருந்து கொழும்பு(Colombo), காலி(Galle) மற்றும் ஹம்பாந்தோட்டை(Hambandota) ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புக்களில் இவ்வாறு கடல் அலை மேலெழக் கூடும் என்றும் இதன் காரணமாக அவதானமாக செயற்படுமாறும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த கடற்பரப்பில் 2.5 மீற்றர் முதல் 3 மீற்றர் வரையான உயரத்திற்கு கடல் அலை மேலெழக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களத்தில் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது வார இறுதி நாட்கள் என்பதால் பெரும்பாலான மக்கள் கடற்கரைகளில் உலாவுவதற்கு செல்கின்றனர்.
மேலும், நிலவும் கடும் வெப்பமான கால நிலை காரணமாகவும் கடற்கரைக்குச் செல்வதும், நீராடுவதற்காகவும் செல்லும் மக்கள் தொகை அதிகரித்துள்ளது.
அத்துடன் பாடசாலை விடுமுறை காலம் என்பதனாலும், சிறுவர்களையும் அழைத்துக் கொண்டு நீராடச் செல்லும் வழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடல் அலை மேலெழும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள இந்த காலப் பகுதியில் பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.
சிறுவர்கள் மற்றும் இளைஞர் யுவதிகள் முதல் பெரியவர்கள் வரை கடற்கரைக்குச் செல்லும் போது அவதானமாக செயற்படுவதுடன் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவுறுத்தலைப் பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.