விமல் வீரவன்சவுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
சட்டவிரோதமான முறையில் பணம் மற்றும் சொத்துக்களை கையகப்படுத்தியமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு(Wimal Weerawansa) எதிராக தொடரப்பட்ட வழக்கு தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நேற்றைய தினம்(03.05.2024) குறித்த வழக்கானது, ஜூலை 18 ஆம் திகதி விசாரணைக்கு உட்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், மூன்று அரசு தரப்பு சாட்சிகளுக்கு அடுத்த விசாரணைத் திகதியன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு விமல் வீரவன்சவுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறை
இந்த நிலையில், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், விமல் வீரவன்சவுக்கு எதிராக சட்டவிரோதமான முறையில் பணம் மற்றும் சொத்துக்களை பெற்றுக்கொண்டமை தொடர்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் அமைச்சராகப் பணியாற்றிய ஆறு வருட காலப்பகுதிக்குள் 75 மில்லியன் ரூபா இவரால் சட்டவிரோதமான முறையில் சம்பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும், 2009 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31, 2014 வரையில் அறிவிக்கப்படாத சொத்துக்கள் மூலம் அமைச்சர் இந்தக் குற்றத்தைச் செய்ததாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) பணிப்பாளர் நாயகம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இலஞ்ச ஊழல் சட்டத்தின் பிரிவு 23(a) க்கு முரணாக அமைச்சர் சட்டவிரோதமான முறையில் 26 பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டதாகவும், வீடு ஒன்றை நிர்மாணித்ததாகவும், காணிகள் மற்றும் வாகனங்களை கொள்வனவு செய்ததாகவும் பணிப்பாளர் நாயகம் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும், முன்னாள் அமைச்சர் வீரவன்ச இந்தச் சொத்துக்களை இலஞ்சமாக பெற்றுக்கொண்ட சொத்துக்கள் என இலஞ்ச ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.