ஷானி அபேசேகரவின் வழக்கு விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான ஷானி அபேசேகரவினால் (Shani Abeysekara) தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தொடர்வதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த அனுமதியானது நேற்றைய தினம் (05.05.2024) உயர்நீதிமன்ற நீதியரசர்களினால் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் பொலிஸ் சேவையிலிருந்து தன்னை இடைநிறுத்துவதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு எடுத்த தீர்மானத்தை எதிர்த்து ஷானி அபேசேகர மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.
இடம் மாற்றம்
இந்நிலையிலேயே குறித்த வழக்கு உயர்நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, ஷானி அபேசேகர தெரிவிக்கையில்,
“2019ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாகி நான்கு நாட்களிலேயே பிரதி பொலிஸ்மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளராக நான் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எனக்கு தொலைபேசி மூலம் தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து, காலியின் பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவரின் தனிப்பட்ட உதவியாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் நியமிக்கப்பட்டமை இலங்கை பொலிஸ் வரலாற்றில் இதுவே முதல் சந்தர்ப்பம்.
நட்ட ஈடு
மேலும், என்னை இடமாற்றம் செய்ததற்கான காரணம் எனக்குத் தெரியாது.
இதனையடுத்து, 2020 ஜனவரி 7ஆம் திகதியிட்ட கடிதத்தின் மூலம் தேசிய பொலிஸ் ஆணைக்குழு என்னை, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பொலிஸ் தலைமையகத்திற்கு மாற்றிய பின்னர் சேவையில் இருந்து இடைநிறுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், எனது அடிப்படை உரிமைகளை மீறியதற்காக 10 மில்லியன் ரூபாவை நட்டயீடாக வழங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்